Advertisment

காவலாளி அடித்துக் கொலை; பருப்பு ஆலையில் கைவரிசை காட்டிய பீகார் வாலிபர் சிக்கினார்!

Salem private company guard passed away

Advertisment

சேலத்தில், பருப்பு ஆலையில் இரவுக் காவலாளியை அடித்துக் கொலை செய்துவிட்டு, ஆலையிலிருந்து பணத்தைகொள்ளை அடித்துச் சென்ற பீகார் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம், அமானி கொண்டலாம்பட்டி சித்தன் நகரைச் சேர்ந்தவர் தங்கையன் (58). இவர், சேலம் 3 சாலை அருகே இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் இரவுக் காவலாளியாக வேலை செய்து வந்தார். பிப். 9ம் தேதி காலையில் அவர் பருப்பு ஆலையில்மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தங்கையனின் முகம் மற்றும் தலையில் பலமாகத்தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. அதேநேரம் பருப்பு ஆலையில் கல்லாவில் இருந்த பணமும் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள், காவலாளியைக் கொன்றுவிட்டுபணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

நிகழ்விடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர், மிதிவண்டியில் அந்த ஆலைக்குள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. விசாரணையில், மிதிவண்டியில் வந்த மர்ம நபர் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் அந்த ஆலையில் வேலைக்குச் சேர்ந்தவர் என்பதும்அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித்குமார் என்கிற சோனுகுமார் (19) என்பதும் தெரிய வந்தது. அந்த வாலிபர் ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்குத் தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், சேலம் சூரமங்கலம் ரயில்நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். காவல்துறையினர் எதிர்பார்த்தது போலவே ரயில்நிலையத்திற்கு வந்த சோனு குமாரை மடக்கிப் பிடித்தனர்.

Advertisment

அவரை பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்தான் காவலாளி தங்கையனை கொலை செய்துவிட்டு, பருப்பு ஆலையில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது. எனினும், அவரிடம் இருந்து மொத்தம் 1.42 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் பேசினோம். பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. ''சோனுகுமார் சிறுவனாக இருந்தபோதே பெற்றோருடன் பிழைப்பு தேடி சேலம் வந்துள்ளார். பள்ளிப் படிப்பைக் கூட முடித்திராத அவர் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த பருப்பு ஆலையிலும் ஒரு நாள் வேலை செய்துள்ளார். அன்று அவருக்கு 600 ரூபாய் கூலி கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், பருப்பு ஆலையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளதை நோட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து பணத்தைகொள்ளையடிக்க திட்டமிட்ட சோனு குமார், சம்பவத்தன்று இரவு மிதிவண்டியில் ஆலைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலாளி தங்கையன், ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தாய்? எனக் கேட்டதோடு, ஆலை உரிமையாளருக்கும் அலைபேசியில் தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சோனுகுமார், அருகில் கிடந்த காலி கோணிப்பையை எடுத்து அவருடைய முகத்தில் போட்டுசரமாரியாகத்தாக்கியுள்ளார். கீழே கிடந்த கட்டையை எடுத்தும் தாக்கியுள்ளார். இதில் தங்கையன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து அவர் பருப்பு ஆலைக்குள் சென்று கல்லாவில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் உடனடியாக சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் கிளம்பிச் சென்றுவிட்டனர். சோனு குமாரும் பீகார் தப்பிச் செல்ல முயன்றபோதுதான் அவர் காவல்துறை வசம் பிடிபட்டுள்ளார். சோனுகுமாரிடம் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வாறு வந்தது என்பதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது'' என்கிறார்கள் காவல்துறையினர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe