
சேலம் சிறையில் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கீழ்மாட்டையாம்பட்டி பூவான்வலவு பகுதியை கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த மே மாதம் 1- ஆம் தேதி வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்குத் திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களிலும் மகளை தேடிப்பார்த்தனர்.
அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி தனபால் என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே, அப்பகுதியில் ஒரு மாமரத்தின் அருகே சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் தனபாலை பிடித்து விசாரித்தனர்.
சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாகக் கூறி தனபால் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றதும், மறைவான இடத்தில் வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்தி கூச்சல் போட்டதால், சிறுமியை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் 5- ஆம் தேதி, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. நவம்பர் 9- ஆம் தேதியன்று தனது தாயாரிடம் செல்போன் வீடியோ அழைப்பு மூலம் சிறையில் இருந்தவாறே தனபால் பேசினார். அப்போது தன்னை சீக்கிரமாக ஜாமீனில் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
குண்டர் சட்டத்தில் கைது ஆனதால் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என தாயார் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தனபால், தனது சிறை அறைக்குள் சென்று தான் வைத்திருந்த துண்டை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறைக்கைதி தற்கொலை என்பதால் மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தனபாலின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.