சேலம் மாநகர காவல்துறையில், காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உள்பட 120 காவலர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் சேலம் மாநகர காவல்துறையில் கரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

Advertisment

கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலத்தைப் பொருத்தவரை முகக்கவசம் அணிவது, தேவையின்றி பொதுவெளியில் வரும் வாகனங்களில் அடையாளக் குறியிடுவது, வழக்குப்பதிவு செய்தல் என ஊரடங்கு விஷயத்தில் ரொம்பவே கறாராகச் செயல்பட்டு வந்தனர். ஒருபுறம் அடக்குமுறை போல தெரிந்தாலும், காவல்துறையின் முன்னெடுப்புகளால்தான் பொதுவெளியில் நடமாடுவோர் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

Advertisment

salem

இந்நிலையில், காவலர் ஒருவரும் கரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பது அவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை புதூர் பட்டாலியனைச் சேர்ந்த 90 காவலர்கள், கடந்த பிப்ரவரி மாதம் சேலத்திற்கு வந்தனர். இவர்கள் அன்னதானப்பட்டி காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, பல்வேறு இடங்களுக்குப் பாதுகாப்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்களில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த 27 வயதான காவலர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisment

http://onelink.to/nknapp

இதையடுத்து, அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த அவரை உடனடியாகச் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் சேர்த்தனர். அங்குஅவருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்தக் காவலருடன் தங்கியிருந்த 90 காவலர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) காலையில் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள காவலர் பணியிடைப் பயிற்சிபள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

கரோனா தொற்று கண்டறியப்பட்ட காவலர், கடந்த பதினைந்து நாள்களில் சேலத்தில் எங்கெங்கு பணியாற்றினார், யார் யாருடன் தொடர்பில் இருந்தார் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர் யாருடனாவது கைகுலுக்கினாரா? நெருங்கி நின்று பேசினாரா என்ற விவரங்களை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கரோனா பாதித்த காவலருடன் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர், எஸ்ஐ., உள்பட பத்து பேரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கரோனா தொற்று கண்டறியப்பட்ட காவலரின் மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடல்நலம் குன்றியதால், சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையையும், மனைவியையும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வசதியாகவே அவர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணி ஒதுக்கீடு பெற்றுச் சென்றிருந்தார்.

அப்போது அங்கு அவருடன் 20 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் சேலம் மாநகர காவல்துறையினரிடையே கரோனா பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.