மாஜி முதல்வரின் உதவியாளரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; சேலம் காவல்துறையினர் அழைப்பு!

Salem police call compliant aide to a former chief

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் கைதாகி உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (52). இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது முதல்வருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து மோசடி செய்ததாகப்புகார்கள் கிளம்பின. ஆனாலும், அப்போது அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாகப் புகார் கொடுக்க முன்வரவில்லை. இப்படி ஏமாந்தவர்களில் சொந்தக் கட்சியினரும் ஏராளமானோர் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி இளைஞரான தமிழ்ச்செல்வன் (29) என்பவரிடம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக 17 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார் மணி. இதற்கு மணியின் நண்பர் செல்வக்குமார் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதற்கிடையே மணி 4 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். மீதப்பணத்தைக் திருப்பிக் கேட்டு பலமுறை நடையாய் நடந்தும் அவரை ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மணி, செல்வக்குமார் ஆகிய இருவர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், நவ. 28ம் தேதியன்று மணி சொந்த ஊருக்கு வந்திருந்தபோது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

இதற்கிடையே, வேலை வாங்கிக் கொடுப்பதாக பண மோசடி செய்ததாக இதுவரை 14 பேர் மணி மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அரசு வேலை மட்டுமின்றி கட்சிப்பதவிக்காக பணம் கொடுத்திருந்தாலும் அதுபற்றியும் புகார் தெரிவிக்கும்படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி மணியின் கூட்டாளியான செல்வக்குமாரைப் பிடிக்கவும் தனிப்படையினர் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Subscribe