/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maoist444.jpg)
சேலத்தில், ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கணவாய்ப் புதூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட். கேரள வனப்பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2019- ஆம் ஆண்டு அக். 28- ஆம் தேதி, மாவோயிஸ்ட்களுக்கும், கேரள மாநில தண்டர்போல்ட் அதிரடிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து மணிவாசகத்தின் சடலத்தை அவருடைய மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, ஆகியோர் நீதிமன்றம் மூலம் பெற்று, சொந்த ஊரான ராமமூர்த்தி நகரில் தகனம் செய்தனர்.
இறுதிச்சடங்கின்போது வந்திருந்த மணிவாசகத்தின் ஆதரவாளர்கள், மாவோவிய போராளிகள், ஆதரவாளர்கள் சிலர் அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கே.என்.புதூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மாவோயிஸ்ட்கள், ஆதரவாளர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன், மதுரையைச் சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
தலைமறைவான 10 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், அவர்களை பிடிக்க எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவின்பேரில் ஓமலூர் டி.எஸ்.பி. சோமசுந்தரம், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்த மாவோவிய ஆதரவாளர்கள் செல்வராஜ் (55), ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வநகரைச் சேர்ந்த சீனிவாசன் (66) ஆகிய 3 பேரை தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) கைது செய்தனர்.
கைதான 3 பேரும் கடந்த 2019- ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்கள் எங்கெங்கெல்லாம் தங்கியிருந்தனர்? அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது.
இதையடுத்து அவர்களை ஓமலூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் உத்தரவின்பேரில் மூவரும் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார். மாவட்ட காவல்துறையினருடன் கியூ பிரிவு காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு கோவையில் மாவோவிய ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலத்திலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் திடீர் நடவடிக்கை மாவோயிய ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)