Skip to main content

சிறுமிகளை சீரழித்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

சேலத்தில், பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டியைச் சேர்ந்த ராஜா கவுண்டர் மகன் பெருமாள் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து, இரண்டு மகள்களையும் பெருமாள் தன்னந்தனியாக வளர்த்து வந்தார். 

salem pocso special court judgement

கடந்த 2015ம் ஆண்டு, இரண்டு பெண் குழந்தைகளும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றனர். அப்போது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர் ஒருவர், இதுகுறித்து சேலத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார்.


சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகி சில்வியா மற்றும் ஊழியர்கள், இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் நலக்குழு நிர்வாகி சேவியர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் தந்தை பெருமாளிடம் விசாரித்தார். அவர் பலமுறை தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சேவியர், பெருமாள் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெருமாளை கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை, சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் வியாழக்கிழமை (பிப். 20) தீர்ப்பு அளித்தார். பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெருமாளுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்டத் தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பில் கூறியுள்ளார்.


இதையடுத்து பெருமாளை, நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.