கல்வி வளாகத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் தேவையற்றது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் கூறினார். சேலம் பெரியார் பல்கலையில், நடந்த 19வது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

Advertisment

சேலம் பெரியார் பல்கலையின் 19- வது பட்டமளிப்பு விழா, வியாழக்கிழமை (அக். 24) நடந்தது. தமிழக ஆளுநரும், பல்கலை வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார்.விழாவில், 261 மாணவ, மாணவிகளுக்கு பிஹெச்.டி., பட்டமும், பெரியார் பல்கலை மற்றும் அத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பிஹெச்டி., எம்.பில், முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளில் 95 பேருக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்.

Advertisment

salem periyar university graduation supreme court former chief judge speech

இப்பல்கலையில் முதன்முதலாக டி.எஸ்ஸி., பட்டச்சான்றிதழும் ஒருவருக்கு வழங்கப்பட்டது. பெரியார் பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 55427 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவம் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது:

சேலம் பெரியார் பல்கலை, தேசிய தர மதிப்பீட்டில் 'ஏ' சான்றிதழும், தேசிய தரவரிசை பட்டியலில் 68- வது இடத்தையும் பெற்றுள்ளது.இந்தியாவில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். உலகளவில் பெருகி வரும் வாய்ப்புகளை இளைஞர்கள் பெறும் வகையில், அவர்களின் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மைப் பணியாகும்.

Advertisment

அதனால், உயர்கல்வித்துறையில் புதுமையான முயற்சிகள் வர வேண்டும். அரசியல் செயல்பாடுகள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் உகந்தது அல்ல. கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான அறிவுநிலை உரையாடல் ஆகியவைதான் பல்கலை வளாகத்திற்குள் தேவை. மாறாக தீமை அல்லது வன்முறை அறவே தேவையில்லை என கருதுகிறேன். உங்களுடைய அறிவும், முயற்சியும் நீங்கள் பெற்றிருக்கின்ற பட்டத்தை குறிப்பிடுகின்றது. வாழ்க்கை வடிவமைப்பில் கல்வி மிக முக்கிய அங்கம். ஆனால் நற்பண்புகளே உங்களுடைய இறுதி இலக்கை நிர்ணயிக்கும். இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் பேசினார்.

salem periyar university graduation supreme court former chief judge speech

பல்கலை இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகன், பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) முத்துசாமி, பேராசிரியர்கள், ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.