Advertisment

ஊழலுக்கு அச்சாரமிட்ட சேலம் பெரியார் பல்கலை 100வது சிண்டிகேட் கூட்டம்! 

periyar

Advertisment

முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், பணி நியமன கோப்புகள் மாயமானது உள்ளிட்ட விவகாரங்களால் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெரியார் பல்கலையின் 100வது சிண்டிகேட் குழு கூட்டம், வறுத்த முந்திரி, காபி, சுவையான சாப்பாடு சகிதமாக சப்பென்று முடிந்தது பல்கலை வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு கோணத்தில், இந்தக் கூட்டத்தில் மற்றொரு ஊழக்கும் அச்சாரம் போடப்பட்டுள்ளதாகவும் காதைக் கடிக்கிறார்கள் பேராசிரியர்கள்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 100வது சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை கூட்டரங்கில் நேற்று (ஜூன் 28, 2018) நடந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது சிண்டிகேட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து, பல்கலை வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை.

சிண்டிகேட் குழுவின் 'செஞ்சுரி' கூட்டம் என்பதோடு, புதிய துணைவேந்தர் கொழந்தைவேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது கூட்டம் என்பதாலும் பல்கலை பேராசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவின.

Advertisment

குறிப்பாக, சர்ச்சைக்குரிய வகையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விவகாரம், முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் பதவியில் இருந்தபோது நடந்த பணி நியமனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் விவகாரம், தற்போதைய பதிவாளர் மணிவண்ணன் பணியில் இருக்கும்போதே மற்றொரு பல்கலைக்கு பேராசிரியர் பணியிடத்திற்கு நேர்காணலுக்குச் சென்ற விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிண்டிகேட் குழு கூட்டத்தில் நடந்ததே வேறு என்கிறார்கள் கூட்ட விவரங்களை அறிந்தவர்கள். அவர்கள் புட்டுப்புட்டு வைக்கும் செய்திகள், பல்கலையில் மேலும் சர்ச்சைகளை எழுப்பும் என்றும் தெரிகிறது.

''ஒவ்வொரு பல்கலையின் சிண்டிகேட் குழுவிலும் உயர்கல்வித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், சட்டக்கல்வி இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோரும் பதவிவழி (Ex-Officio) உறுப்பினராக அங்கம் வகிக்கக் கூடியவர்கள். ஆனால், மிக மிக அரிதாகவே சிண்டிகேட் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அரசின் நேரடி பிரதிநிதிகள் இல்லாத கூட்டங்கள் எந்தளவுக்கு நேர்மையாக நடக்கும் என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பதவிவழி அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவே முடியாது என்றால், அத்தகையவர்களை சிண்டிகேட் குழுவின் அங்கமாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏன்?

முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ் பணிக்காலத்தின்போது, மேட்டூர் உறுப்புக்கல்லூரியில் 22 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை பணிவரன்முறைப்படுத்துவது (ரெகுலரைஸ்) தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பும் கிடைத்துவிட்டது. ஆனால், பெரியார் பல்கலை நிர்வாகம் இதுவரை அவர்களுக்கு பணிவரன்முறை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.

நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், மேட்டூர் கல்லூரி ஆசிரியர்களை பணிவரன்முறைப் படுத்துவது தொடர்பாக அரசுத்தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு துணைவேந்தரே அதை நடைமுறைப்படுத்தலாம். அப்படி இருக்கும்போது, அரசு கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது மேலும் காலதாமதம் ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, பணிவரன்முறைப்படுத்த அதிகாரத்தில் இருப்பவர்கள் பணம் கையூட்டு பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் இன்னொரு ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்.

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த லீலா, ஆறு மாதங்களுக்கு முன்பு பணிக்காலம் முடிந்து வெளியேறினார். அதன்பிறகு, புதிய கட்டுப்பாட்டு அலுவலரை நியமிப்பதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்களும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில், புதிதாக மீண்டும் அந்தப் பதவிக்கு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். இதிலும் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது,'' என்றனர்.

மேலும் சில பேராசிரியர்கள் கூறுகையில், ''இப்போதுள்ள பதிவாளர் மணிவண்ணன் வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார். தேவைப்பட்டால் அவருக்கு மேலும் சில காலம் அதே பதவியில் தொடர துணைவேந்தருக்கு அதிகாரம் அளிக்கலாம் என்றும் விவாதித்துள்ளனர்.

பதிவாளர் மணிவண்ணன், இங்கு பணியில் இருக்கும்போதே மற்றொரு பல்கலையில் பேராசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்று, தேர்வு பெற்றதற்காக பல்கலையில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார். அதுவே விதிகளுக்கு முரணானது. அதுமட்டுமல்லாமல், சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்தபோது நடந்த பணிநியமன ஊழலில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கினால் முக்கிய ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளன,'' என்றும் கூறுகின்றனர்.

பல்கலையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சில பேராசிரியர்கள் ஊடகங்களிடம் கையூட்டு கொடுத்து செய்திகள் போடுவதாகவும், செய்திகளை கசிய விடும் பேராசிரியர்களுக்கு இரண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கலாம் என்றும் சிண்டிகேட் உழுப்பினர்கள் செல்வம், நடராஜன் ஆகியோர் காரசாரமான வாக்குவாதங்களை முன்வைத்துள்ளனர்.

அப்படியெனில், பெரியார் பல்கலை நிர்வாகம் ஏன் அத்தகைய செய்திகளுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறது என்றும் வினா எழுப்புகின்றனர்.

பல்கலை வளர்ச்சிக்கான விவாதங்களை முன்னெடுக்காமல், ஆதாய நோக்கில் மட்டுமே நேற்றைய சிண்டிகேட் குழு கூட்டமும் முடிந்து போனது. கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு வழக்கம்போல் அமர்வுத்தொகை, பயணப்படி என பல ஆயிரங்களை அள்ளி இறைத்ததோடு, வறுத்த முந்திரி, காபி, உயர்தர சாப்பாட்டுடன் கூட்டத்தை நிறைவு செய்தனர் என்கிறார்கள் பல்கலை உள்விவகாரங்களை உற்று நோக்கும் பேராசிரியர்கள்.

அறம் வளர்க்க வேண்டிய பல்கலைக்கழகம், அறங்களை தீர்த்துக்கட்டும் 'பல்கொலை'க்கழகமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

periyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe