Skip to main content

சேலம்: 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

Salem - Odisha State Workers -


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சேலத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழகத்தில் குடும்பத்துடன் தங்கி கட்டுமானம், ஜவுளித்துறை, சுரங்கம், உணவகங்கள், கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர். 
 


கரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால், புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்குத் திரும்ப முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது சொந்த மாநிலத்திற்குச் செல்ல விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை நடுவண் அரசு இயக்கி வருகிறது. 


இதையடுத்து கடந்த ஒரு சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுய விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 


சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 773 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திங்களன்று (மே 25) ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு உரிய மருத்துவச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
 


சேலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவர்களின் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, சேலம் சி.எஸ்.ஐ. இம்மானுவேல் அரங்கம், சாரதா மகளிர் கல்லூரி, சவுடேஸ்வரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளையும் சேலம் மாவட்ட நிர்வாகம் விரிவாகச் செய்திருந்தது.


ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கி பணியாற்றி வந்த 24 பேர், திருப்பூரில் வேலை செய்து வந்த 3 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்தந் 296 பேர், வேலூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த 229 பேர், திருப்பத்தூரில் பணியாற்றி வந்த 113 பேர், சேலத்தில் பணியாற்றி வந்த 773 பேர் என மொத்தம் 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சிறப்பு ரயில் மூலம் சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து அவர்களின் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பேருந்து வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.


சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், வருவாய் அலுவலர் திவாகர், சேலம் கோட்டாட்சியர் மாறன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் உள்ளிட்டோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சுய விருப்பத்தின்பேரில் அவரவர் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்கான ரயில் போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். 
 

http://onelink.to/nknapp


ஆகவே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் வரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போதுள்ள முகாம்களிலேயே தங்கியிருக்க வேண்டும்,'' என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

பா.ஜ.க. கூட்டணி முயற்சி தோல்வி; வெளியான பரபரப்பு தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP Coalition efforts fail Exciting information released
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

BJP Coalition efforts fail Exciting information released
பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி

இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.