Advertisment

சிறுமி கொலை வழக்கு: பாமக பிரமுகர் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள்! சேலம் நீதிமன்றம் தீர்ப்பு!!

வாழப்பாடி அருகே, பத்து வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

m

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி உள்பட மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி இரவு பரமசிவம் அவருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பரமசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பூங்கொடியை கடத்திச்சென்றது. அவர்களின் வீட்டுக்கு அப்போது கதவு இல்லாததால், அந்த கும்பல் வீடு புகுந்ததை தூக்கத்தில் இருந்த அவர்களால் உணர முடியவில்லை.

சிறுமி கூச்சல் போடாமல் இருக்க, அவளுடைய வாயில் துணியை வைத்து அடைத்த அந்த கும்பல், அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைப்பகுதிக்குச் கடத்திச்சென்றது. அந்த கும்பல் குடி போதையி, சிறுமியை துடிதுடிக்க பாலியல் வன்புணர்வு செய்தனர். இதில் பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானாள். பிறகு, அந்த கும்பல் சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பிச்சென்றது.

Advertisment

தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்த பூபதி, ஸ்னேக் பாபு என்கிற ஆனந்த் பாபு, ஆனந்த், பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

இவர்களில் பூபதி, அப்போது சென்றாயம்பாளையத்தில் பாமக தரப்பில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாமக தலைமை பூபதியை கட்சியைவிட்டு அதிரடியாக நீக்கியது.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், சிறுமியை இழந்த குடும்பத்தினருக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்போது பல்வேறு அமைப்புகள் போராடின. இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் தனசேகரன் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில், சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 19, 2019) தீர்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, மகளிர் நீதிமன்றத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. பிணையில் இருந்த குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, இந்த வழக்கில் நீங்கள் ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது என்று தடாலடியாக கூறினார். பின்னர் அவர், ''இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்பினால் கூறலாம் என குற்றவாளிகளுக்கு பேச வாய்ப்பு அளித்தார். அப்போது பூபதி உள்ளிட்ட ஐந்து பேரும், இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. காவல்துறையினர் எங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்து சிக்க வைத்துள்ளனர். நாங்கள் நிரபாரதிகள்,'' என்று கூறினர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜயகுமாரி, வரும் 21.3.2019ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும், குற்றவாளிகளை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் ஐவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

court murder Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe