சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனி மாரியப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி நல்லம்மாள் (63). இவர்களுக்கு சிவகுமார் (47) என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். லதாவுக்கு திருமணமாகி காமராஜர் நகர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிவகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

 Salem - Mother-son issue

Advertisment

இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 4) மதியம் வீட்டின் அறையில் மர்மமான முறையில் நல்லம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சிவகுமார், தனது தாயை கொலை செய்து விட்டதாக அம்மாபேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Advertisment

 Salem - Mother-son issue

விசாரணையில், காரிப்பட்டியில் நல்லம்மாளுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை விற்றுவிட்டு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காமராஜர் நகர் காலனி பகுதியில் வாடகை வீட்டிற்கு தாயுடன் குடியேறினார் சிவகுமார். நல்லம்மாளுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயாருக்கு மகள் லதா தினமும் உணவு கொண்டு வந்து கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிவகுமாருக்கு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் மனைவியுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. உடல்நலம் சரியில்லாத தாயாரை கவனிக்க வேண்டியுள்ளதால், அந்தப் பெண்ணை சந்திக்க முடியவில்லை எனக்கூறி தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அதனால் சிலமுறை அந்த ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியை தன் வீட்டிற்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார்.

இதை நல்லம்மாள் கண்டித்துள்ளார். அந்தப் பெண் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், தனது தாயாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் 4ம் தேதியன்று, தாய்க்கு அதிகளவில் தூக்க மாத்திரை கொடுத்ததால், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். மேலும், தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி, மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

தவறான தொடர்பு கொண்டுள்ள பெண்ணுக்காக பெற்ற தாயையே மகன் தலையணையால் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.