
சேலத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக, 'சேலம் மதி' என்ற புதிய செல்ஃபோன் செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை (பிப். 16) துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘சேலம் மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் 12,487 மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறத்தில் 6,894 குழுக்களும் என மொத்தம் 19,381 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் 3 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுக்களின் மொத்த சேமிப்புத் தொகை 217 கோடி ரூபாய்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு 2020 - 2021 நிதியாண்டில் 958 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு, குழு தொடங்கியவுடன் 3 மாதங்களுக்குப் பிறகு வங்கிகளால் தர மதிப்பீடு செய்யப்பட்டு, ஆதார நிதியாக 15 ஆயிரம் ரூபாய் வீதம், ஒவ்வொரு குழுவிற்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆதார நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கும் சேமிப்பின் மூலம் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டு இதுவரை ரூ.1.50 கோடி ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்தும் பொருட்டு, மாநில, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 2005ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் அனைத்தும் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவிபுரிகின்றன. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கல்லூரி சந்தைகள் மிக முக்கியமான சந்தை வாய்ப்பாக உள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், அப்பொருட்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்திடவும், விளம்பர உத்தியாகவும் மகளிர் சுய குழுக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், 'சேலம் மதி' என்ற விற்பனை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று (பிப். 16) துவக்கி வைத்தார். இந்தச் செயலி, சேலம் மாவட்ட பொதுமக்களுக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கும்.
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 470 மகளிர் சுய உதவிக் குழுக்களின் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை 'சேலம் மதி' செயலி மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
'சேலம் மதி' செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, தங்கள் செல்ஃபோன் மூலம் தங்களுக்கு விருப்பப்பட்ட, தேவையான பொருட்களை தேர்வு செய்து, அதற்கு உண்டான ஆர்டர்களை வழங்கினால் அவர்களின் வீட்டுக்கே மகளிர் குழுக்கள் மூலம் விநியோகம் செய்யப்படும். பொருட்களைப் பெற்றுக்கொண்ட பின் அதற்கு உரிய பணத்தைக் கொடுத்தால் போதும்.
'சேலம் மதி' செயலி சேவையைப் பயன்படுத்தி மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை தரமாகவும், குறைந்த விலையிலும் பெற்று பயன்பெறுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.’ இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.