Skip to main content

மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல் சேலம் வந்தது! கேரள அரசை கண்டித்து போராளிகள் கண்டன முழக்கம்!!

கேரள மாநிலக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் போராளி மணிவாசகத்தின் உடல், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13, 2019) சேலம் கொண்டு வரப்பட்டது.

manivasakam


சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (55). மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோ இயக்க போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில், கேரளாவில் செயல்பட்டு வரும் தண்டர்போல்ட் தனிப்படை காவல்துறையினர் கடந்த அக். 29ம் தேதி, அட்டப்பாடி அருகே வைத்து மாவோ போராளிகள் சிலரை சுற்றி வளைத்தனர்.


அப்போது ஏற்பட்ட மோதலில், மணிவாசகம், சென்னையைச் சேர்ந்த கார்த்திக், அரவிந்த் என்கிற சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா ஆகிய நான்கு போராளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர்களை பிடித்து வைத்துக்கொண்டு திட்டமிட்டு சுட்டுக்கொன்றுவிட்டு என்கவுன்டர் செய்ததாக கதை விடுவதாக  ஆளும் பினராயி விஜயன் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளன. 

salem manivasakam incident kerala govt against fighters strike


இது ஒருபுறம் இருக்க, கொல்லப்பட்ட நால்வரின் சடலங்களும் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டது. மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய கேரளா நீதிமன்றமும் அனுமதி அளித்தது. மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண்பதற்காக தீவட்டிப்பட்டியில் வசிக்கும் அவருடைய தங்கை லட்சுமி சென்றபோது, சடலத்தை பார்ப்பதற்கே அனுமதிக்காமல் கேரளா காவல்துறை நிறைய முட்டுக்கட்டைகளை போட்டுள்ளது. 


பின்னர் நீதிமன்ற உத்தரவு மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு தான் உடற்கூறாய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக, கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13, 2019) இரவு 7.55 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. 


இதுகுறித்து முன்கூட்டிய தகவல் அறிந்திருந்த மாவோவிய செயல்பாட்டாளர்களான விவேக், வளர்மதி, சுரேஷ்ராஜன், மாரியப்பன், வெங்கடேஷ், தமயந்தி, ஈஸ்வரி, வின்சென்ட் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். சடலம் பாதுகாப்பாக, பிணவறையில் வைக்கப்பட்டது. பிணவறைக் கிடங்கு முன்பு கூடிய மாவோவிய போராளிகள், மணிவாசகம், சுரேஷ், கார்த்திக், அஜிதா ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிட்ட பதாகைகளை ஏந்தி க்கொண்டும் செவ்வணக்கம், இன்குலாப் ஜிந்தாபாத் எனக்கூறி முழக்கமிட்டனர்.

salem manivasakam incident kerala govt against fighters strike


மேலும், மாவோயிஸ்டுகள் வர்க்கப் போராளிகளே; தீவிரவாதிகள் அல்ல என்றும், மாவோவிய போராளிகள் நால்வரும் கொல்லப்பட்டதற்கு பினராயி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கி வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., அரசைக் கண்டித்தும், முதல்வர் பினராயி விஜயனைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். 


மணிவாசகத்தின் தங்கை சந்திரா, அவருடைய மனைவி கலா ஆகியோரும் மாவோவிய இயக்கங்களில் சேர்ந்து செயல்பட்டு வந்தனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டு உள்ளனர். மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் அவர்களும் கலந்து கொள்ள, நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. 


அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை (நவ. 14) அல்லது வெள்ளிக்கிழமைக்குள் பரோல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் வந்த பிறகு, மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.


இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் லத்தி மற்றும் தடுப்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நுண்ணறிவுப்பிரிவு, கியூ பிரிவு, எஸ்பிசிஐடி, ஐபி என பல்வேறு உளவுப்பிரிவு காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் குவிந்ததால் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...