/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bottle-art.jpg)
சேலம் மாவட்டம் காரிப்பட்டி குழந்தைசாமி நகரைச் சேர்ந்தவர் ராமன் (38). இவருடைய மனைவி சசிகலா (31). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா கணவரைப்பிரிந்து காரிப்பட்டியில் தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் ராமனுடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில் கூலி வேலைக்குச் சென்று வந்த சசிகலாவும், அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து ஜூன் 12 ஆம் தேதி காலை, அப்பகுதியில் சசிகலா சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை மது பாட்டிலால் குத்திக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சசிகலாவின் கணவரிடம் விசாரித்தபோது, தன் மனைவி பிரபு என்பவருடன் பழகி வந்துள்ளார். எனவே அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பிரபுவை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவரோ, இந்த கொலைக்கும்தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சம்பவத்தன்று தான் அந்தப் பகுதியில் இல்லை என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே, சசிகலாவின் கணவர் ராமனை மீண்டும் சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரனையில், ஜூன் 11 ஆம் தேதி இரவு ராமன் காரிப்பட்டிக்கு வந்துள்ளார். அவர் சசிகலாவை சமாதானப்படுத்தி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது சசிகலா இனி வாழ்ந்தால்பிரபுவுடன் தான் வாழ்வேன். இனியும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமன், கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து, சசிகலாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு மறுநாள் காலை, மனைவியை சமரசம் பேசி அழைத்துச் செல்வதற்காக வந்தது போலவும், அவருடைய மனைவியின் ஆண் நண்பர் பிரபு தான் மனைவியைக் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராமனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)