/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgjj.jpg)
சேலம் கம்பராய பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்டம், கெங்கவள்ளி தாலுகாவில் உள்ள கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, சட்ட விரோதமாக அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, மாவட்ட ஆட்சியருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மனு அளித்தேன்.
கெங்கவள்ளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குகோவில் நிலத்தில் 1.57 ஹெக்டேர் நிலத்தை, கிராம நிர்வாக அலுவலர் மாற்றம் செய்திருப்பது,மாவட்ட வருவாய் அதிகாரியின் நேரடி ஆய்வில் தெரியவந்தது.
2013-ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்கக்கோரி, 2017, 2018, 2020-ல் வழங்கிய புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், சம்மந்தப்பட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, தமிழக அரசு நான்குவாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)