Advertisment

சேலத்தில் அரங்கேறிய தொலைத்தொடர்பு மோசடி; சவுதி வரை நீளும் தொடர்புகள் 

salem international calls converted local calls cyber action 

சேலத்தில் ஓரிரு இடங்களில் மர்ம நபர்கள், அலைபேசிகளுக்கு வரும் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து வருவதாக சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை உளவுப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, மாநில உளவுத்துறையினர், சேலம் மாவட்ட கியூ பிரிவினர், கொண்டலாம்பட்டி காவல் துறையினர் ஆகியோர் சேலம் கொண்டலாம்பட்டி செல்வ நகரில் சந்தேகத்திற்கு இடமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் கடந்த 13 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். காவல்துறையினர் சோதனைக்குச் சென்றிருந்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுஅந்த அறையில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றம் செய்வதற்கான ரிசீவர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், சில உயர் தொழில்நுட்ப அலைபேசிகள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Advertisment

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வாலிபர், வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த ஆதார் அட்டை, ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது. அவர் தனது சொந்த ஊர் பெங்களூரு என்று கூறியுள்ளார். அந்த வாலிபரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோதுஅவர் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹைதர் அலி (வயது 40) என்பது தெரிய வந்தது. அதே ஊரைச் சேர்ந்த அமீர் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ளார் என்றும், அவரிடம் ஹைதர் அலி மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

Advertisment

சவுதி அரேபியாவில் இருந்து அமீர், சர்வதேச அழைப்புகளை சேலத்தில் உள்ள ஹைதர் அலிக்கு மாற்றி விடுவதும்இவர் அந்த அழைப்புகளை தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றி விடுவதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்ற குற்றச்செயலில் சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒருவரும் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கிருந்து 100 சிம் கார்டுகளும், ரிசீவர் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் தங்கியிருந்த நபர்கள் குறித்து விசாரித்த போது அவர்களும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஷிதாஸ் முகமது (வயது 28), மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வால் (வயது 33) என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் சோதனை நடத்த வருவதை அறிந்த அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த கும்பல் பயங்கரவாத கும்பலுக்கு உதவும் வகையில் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றினார்களா? இவர்கள் பின்னணியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது?வேறு எந்தெந்த மாநிலத்தில், மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரண்டு கும்பலுக்கும், சவுதி அரேபியாவில் உள்ள அமீர் தான் மூளையாகச் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இருவரையும் பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத்தெரிகிறது. இதற்கிடையே, தேவைப்படுமானால் இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

cyber police Salem telecom
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe