
சேலத்தில், 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் குமரவேல் (40). மூட்டை தூக்கும் தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக, இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்று விட்டார். இதையடுத்து குமரவேல் மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஊர் ஊராகச் சென்று மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த அவருக்கு, சேலம் அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
அந்தப் பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சிறுமி, அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் குமரவேல் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்பட்டது. தாயார் விசாரணை செய்ததில், குமரவேல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்று கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய், மகளை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அந்தச் சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் தாயார், குமரவேல் மீது அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், குமரவேல், சிறுமியை தனது பாலியல் விருப்பத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த சிறுமியிடம், தன் ஆசைக்கு ஒத்துழைக்காவிட்டால் உன் தாயையும், தம்பியையும் விஷம் கொடுத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியே பலமுறை அவருடன் பாலுறவு கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குமரவேலை வியாழக்கிழமை (ஏப். 14) அதிகாலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us