சேலத்தில், குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகன் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சரவணன் (40). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisment

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது தாயார் மாதம்மாளுடன் வசித்து வந்தார். சரவணனின் தம்பி முருகேசன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அவர், தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார்.

Advertisment

இதனால் முருகேசன், தனது மூத்த மகன் செல்வத்துடன் (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனி வீட்டில் வசிக்கிறார். சரவணன், முருகேசன், அவருடைய மகன் செல்வம் ஆகிய மூவரும் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

SALEM INCIDENT POLICE INVESTIGATION

(சரவணன்)

கடந்த சில நாள்களுக்கு முன், அண்ணன், தம்பிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சரவணன் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், தனது அண்ணன் சரவணனை தாக்கியுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து விலக்கி வைத்தனர்.

இந்நிலையில், சரவணன் நேற்று இரவு (அக். 13) மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தம்பி வீட்டில் அவருடைய மகன் செல்வம் (சிறுவன்) மட்டும் தனியாக இருந்துள்ளார். இதைப்பார்த்த சரவணன், அவரிடமும் தகராறில் ஈடுபட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், உருட்டுக்கட்டையால் தனது பெரியப்பா சரவணனை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சரவணன் மண்டை உடைந்து, நிகழ்விடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதியினர், சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரவணனை அடித்துக் கொன்றதாக பதினைந்து வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோரை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் சிறுவன் செல்வம், தனது பெரியப்பாவைக் கொன்று இருப்பது தெரிய வந்தது. குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகனே அடித்துக்கொன்ற நிகழ்வு, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.