Skip to main content

கஞ்சாவுக்காக 3 கொலைகள்! சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், சாலையோரம் கேட்பாரற்று தூங்கும் பிச்சைக்காரர்களை குறிவைத்து கொலை செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கியதாக, சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பயணிகள் நிழற்கூடம் அருகே பிப். 1ம் தேதி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அதற்கு அடுத்த நாள் (பிப். 2), திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.


இச்சம்பவத்திற்கு அடுத்த நாளான பிப். 3ம் தேதி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் ஒரு கடையின் வாசலில் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பழ வியாபாரி அங்கமுத்து என்ற முதியவர் கொல்லப்பட்டுக் கிடந்தார். 

salem incident police arrested one  person investigation

இந்த மூன்று கொலைகளுமே ஒரே மாதிரியாக நிகழ்த்தப்பட்டு இருந்தன. மூவருமே கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டிருந்தனர். அதனால் இச்சம்பவத்தின் பின்னணியில் ஒரே குற்றவாளிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் சேலம் மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.


மேலும், சில இடங்களில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை வைத்துப் பார்த்தபோது கொலையாளி, சற்று மனநிலை பாதித்தவர்போல காணப்பட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். ஒருகட்டத்தில், மூன்று கொலைகளையும் அவர்தான் செய்தார் என்பதை ஒப்புக்கொண்டார். 


இதையடுத்து, சிசிவிடி காட்சிகளில் இருப்பவரும், காவல்துறையின் பிடியில் இருப்பவரும் ஒருவர்தானா என்பதை புகைப்பட ஒப்பீட்டு ஆய்வுக்காக சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு படங்களை அனுப்பி வைத்தனர். இந்த இரு புகைப்படங்களும் ஒத்துப்போனது ஆய்வில் தெரிய வந்தது.


இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை (பிப். 22) கைது செய்தனர். அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தேரியூரைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவரின் மகன் ஆண்டிசாமி (19) என்பது தெரிய வந்தது. 


கொலையாளி காவல்துறையில் அளித்த வாக்குமூலம்: 


எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். எனக்கு ராமன் என்ற தம்பி இருக்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். அதனால் என் அம்மாதான் எங்கள் இருவரையும் வளர்த்தார். என் தம்பியும் கூலி வேலைக்குச் சென்று வந்தான். 


படிப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். தந்தை வேறு பெண்ணுடன் சென்று விட்டதால் மேற்கொண்டு படிக்க வசதி இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். 


அவர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைக்கவும் கற்றுக்கொண்டேன். கஞ்சா போதைக்கு அடிமையானதால் அது இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அடிக்கடி என் அம்மாவை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்று கஞ்சா அடித்திருக்கிறேன். 


போதைப்பழக்கத்தால் என் வீட்டையே தீ வைத்து எரித்திருக்கிறேன். அதைத் தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரையும் அடித்திருக்கிறேன். இதனால் ஊர் மக்கள் என்னைக் கண்டாலே எதிரியாக பார்க்கத் தொடங்கினர். 


இந்த நிலையிலும் ஏர்வாடிக்கு என்னை என் அம்மா, அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் ஊருக்குள் இருக்க விடாமல் மக்கள் என்னை விரட்டியதால், ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்தேன். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கஞ்சா அடித்தேன். 


இந்த நிலையில்தான், வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரரை கல்லால் தாக்கி கொலை செய்தேன். அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கி புகைத்தேன். பின்னர் சேலம் வந்தேன். பிச்சைக்காரர்கள், கேட்பாரற்று சாலையோரம் தூங்கும் முதியவர்களை அடித்துக் கொன்றுவிட்டு அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கினேன். போதைக்கு அடிமையானதால் இந்த கொலைகளைச் செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...