
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் தமிழக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 12, 2019) கூறியது:
கடந்த சில காலமாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளே காரணம். பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மருந்துகளை கொள்முதல் செய்வதால் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கு அரசு சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்கள் மருந்து தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, கூடுதல் விலைக்கு மருந்துகளை அரசு கொள்முதல் செய்வதற்காக இதனை செய்து வருகிறது. இதன்மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் தவறான மருந்து கொள்கைகளை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்.
போலியோ இல்லாத சூழலை உருவாக்கிய சொட்டு மருந்தை சரியான காலக்கட்டத்தில் தராமல் இருப்பதற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம். தமிழக அரசின் முத்துலட்சுமி நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசின் திட்டத்தோடு இணைப்பது, துணை சுகாதார நிலையங்களை சுகாதார நல மையங்களாக மாற்றுவது போன்றவற்றின் மூலம் மருத்துவத்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அப்படி செய்தால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மருத்துவர் ரவீந்திரநாத் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)