ADVERTISEMENT

அரசு மருத்துவமனையில் தீ விபத்து; அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் 

06:10 PM Nov 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துச்சாமி, எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் இரண்டு நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். நான்கு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சிறிய மின் கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

மருத்துவ கழிவை எரிப்பது சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழையால் சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை சரி செய்ய 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1397 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக 220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025 க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT