Salem government school teacher suspended in her husband case

சேலம் அருகே, காதல் கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த அரசுப் பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவருடைய மனைவி இளமதி (30). கல்லூரியில் ஒன்றாக படித்தபோது காதலித்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இளமதி, வாழப்பாடி அருகே உள்ள வி.மன்னார்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார்.

Advertisment

மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் மது போதையில் தினமும் மனைவியிடம் தகராறு செய்துவந்தார். மனைவி மீதிருக்கும் கோபத்தில் குழந்தைகளையும் அடித்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி, மணிகண்டன் வழக்கம்போல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளமதி, வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் கணவனை சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்தக் காயமடைந்த மணிகண்டன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வாழப்பாடி காவல் நிலைய காவல்துறையினர் இளமதியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.

அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் சிக்கியிருந்தால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன்படி, ஆசிரியை இளமதியை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சுமதி உத்தரவிட்டுள்ளார்.