/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem 56333333.jpg)
கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண், பெண் நோயாளிகள் இருவர் திடீரென்று தப்பிச்சென்றனர். இதையடுத்து கரோனா வார்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர், கரோனா நோய்த் தொற்றால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 1- ஆம் தேதி அவர் திடீரென்று தப்பி ஓடிவிட்டார். அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவர் தப்பிச்சென்றது குறித்து மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் கரோனா நோயாளி சென்ற விவரங்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், ''கரோனா சிகிச்சைக்கு வந்த முதியவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அவர் இங்கு சிகிச்சைக்கு வந்தபோது மது அருந்தும் எண்ணத்திலேயே இருந்தார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
அவர் காணாமல் போன அன்று, ஏற்கனவே ஒருமுறை தனிமை வார்டை விட்டு வெளியே செல்ல முயன்றார். அதைக் கவனித்து விட்ட மருத்துவர்கள் அவரைப் பிடித்து வந்து வார்டில் சேர்த்தனர். அதன்பிறகும் அவர் யாருக்கும் தெரியாமல் தப்பிச்சென்று விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறை மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கரோனா சிகிச்சை வார்டை பூட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
கரோனா நோயாளி ஒருவர் பாதி சிகிச்சையில் இருக்கும்போதே தப்பிச்சென்றதால் அவர் மூலம் மேலும் பலருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us