சேலத்தில் தேர்தல் பறக்கும்படை குழுவினர் நடத்திய வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 100 கிலோ தங்க நகைகள் சிக்கின.

Advertisment

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் நோக்கில், தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

j

தனி நபர் ஒருவர், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல முடியும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய சான்றுகளைக் காட்டி, அந்தப் பணத்தை உரியவர்கள் பெற்றுச்செல்லலாம். தேர்தல் பறக்கும் படையினருக்கு, எந்த ஒருவரின் வாகனத்தையும் திடீர் தணிக்கை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்நிலையில், ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 4, 2019) காலை வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வாகனத்தை தடுத்து சோதனை நடத்தினர்.

அந்த வாகனத்தில் 100 கிலோ தங்க நகைகள் தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, சென்னையில் இருந்து தங்க நகைகளைக் கொண்டு வருவதாகவும், சேலத்தில் உள்ள பிரபலமான சில நகைக்கடைகளுக்கு அவற்றை கொண்டு செல்வதாகவும் கூறினர்.

இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். என்றாலும், இதுகுறித்து முன்கூட்டியே தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால், நகைகளுடன் வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வருமானவரித்துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.