Salem girl child passed away police investigating with her father

Advertisment

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் சிறுமி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய புகார் குறித்து, சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயதுடைய மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (22) என்ற இளைஞரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். செப். 19ம் தேதி சம்பத், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் தன் மகளை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டதாக சம்பத் மீது காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுமியோ, தான் சம்பத்தை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

Advertisment

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவிக்கு துணையாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட அறிவழகன் செப். 26ம் தேதி காலை வீட்டுக்கு வந்தார். அங்கு மகள் சடலமாகக் கிடந்தாள்.

இதற்கிடையே, சிறுமியின் காதலனான சம்பத்தின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை அவருடைய பெற்றோரே சாதி ஆணவக்கொலை செய்து விட்டதாகவும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவளுடைய தாயார் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் புகார் அளித்தனர். இதற்கிடையே, சிறுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடல், தகனம் செய்யப்பட்டது.

மகளை ஆணவக்கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் சிறுமியின் தந்தை, உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயார் சிகிச்சையில் இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், உடற்கூராய்வின் அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் கிடைத்துவிடும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.