salem flower price hike

Advertisment

தொடர் மழையால் விளைச்சல் குறைந்ததால், சேலம் மலர்ச்சந்தையில் குண்டுமல்லிபூ கிலோ 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி மலர்ச்சந்தை இயங்கி வருகிறது. அயோத்தியாப்பட்டணம், வலசையூர், வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, இடைப்பாடி, சங்ககிரி, ஓமலூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். ஓசூரில் இருந்து ரோஜா பூக்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழையைத் தொடர்ந்து பனிக்காலம் தொடங்குவதால், ஜனவரி முடியும் வரை பூ விளைச்சல் குறைவாகவே இருக்கும். குறிப்பாக மல்லிகைப் பூக்களின் விளைச்சல் குறைந்து விடும்.

Advertisment

மழை மற்றும் பனிக்காலங்களில் வரத்து குறைவதால் மல்லிகைப் பூ வகைகளின் விலையும் தாறுமாறாக எகிறி விடும்.இந்நிலையில், சேலம் வஉசி மலர்ச்சந்தையில் சனிக்கிழமை (நவ. 27) காலையில் குண்டுமல்லி கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சன்ன மல்லிகைப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அதேநேரம், மாலைகள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அரளி, சாமந்தி பூக்களின் விலைகள் கணிசமாக குறைந்து இருந்தது. அரளி கிலோ 250 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ரோஜா கிலோ 100 ரூபாய் ஆக இருந்தது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், ''மழையால் பூக்கள் செடியிலேயே உதிர்ந்தும், அழுகியும் விடுகின்றன. இதனால் குண்டு மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் குண்டுமல்லி கிலோ 3000 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது,'' என்றனர்.