/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1997.jpg)
சங்ககிரி அருகே, ஆண் நண்பருடன் கூட்டு சேர்ந்து கணவருக்குத் தூக்க மாத்திரை கலந்த கஷாயத்தைக் குடிக்க வைத்து, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தேவூர் புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் தயானந்த் (30). இவர், சொந்தமாக நிதி நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்தார். இவருடைய மனைவி அன்னபிரியா (21). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது; 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தயானந்தின் தந்தை பெருமாள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அதுவரை மகனுடன் வசித்துவந்த தாயார் கஸ்தூரி (50), கணவர் மறைவுக்குப் பிறகு கத்தேரியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், அக். 11ஆம் தேதி அதிகாலை தயானந்த் வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே வீட்டுக்குள் தயானந்த் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் தேவூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் தேவி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் தயானந்தின் மனைவி அன்னபிரியாவிடம் விசாரணை நடத்தினர். கணவருக்குத் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு, மரக்கட்டிலில் பயங்கரமாக மோதியதில் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_498.jpg)
இது ஒருபுறம் இருக்க, தயானந்தின் தாயார் கஸ்தூரி, தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அந்தப் புகாரில், தன் மகனிடம் உள்ள 40 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டு மருமகள் அடிக்கடி தகராறு செய்துவந்தார். மகன் பணம் கொடுக்க மறுத்ததால், ஏற்கனவே இரண்டுமுறை கணவன் என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்தினார். அதனால் அவர்தான் மகனை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரையடுத்து, அன்னபிரியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தயானந்த் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், அன்னபிரியாவின் செல்ஃபோன் அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அன்னபிரியா, இரவு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு அடிக்கடி பேசி வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர், இடைப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூரைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் முகேஷ் என்கிற முருகன் (21) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரைப்பிடித்து விசாரணை நடத்தியதில், அன்னபிரியாவும் முருகனும் தயானந்துக்கு தெரியாமல் நெருங்கிப் பழகியதும், அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்திருப்பதும் தெரியவந்தது. தயானந்திடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்த முருகன், வட்டி கொடுப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்று வந்ததில் அன்னபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் நெருங்கிப்பழக தொடங்கியுள்ளனர்.
தயானந்த் பணம் வசூலுக்காக வெளியூர் சென்றுவிட்டால், அந்த நேரத்தில் முருகனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் அன்னபிரியா நெருக்கமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இதை அரசல் புரசலாகத் தெரிந்துகொண்ட தயானந்த், மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால், அன்னபிரியா கணவரிடம் உள்ள மொத்த பணத்தையும் அபகரித்துக்கொண்டு, முருகனுடன் செட்டிலாகிவிடவும், அதற்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில்தான், அக். 11ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்த தயானந்திடம் பணம் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் அன்னபிரியா. பிறகு சமாதானம் ஆன தயானந்த், இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, உடல்நலம் சரியில்லை என்பதால் கஷாயம் குடித்துள்ளார். இங்குதான் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. கணவரைத் தீர்த்துக்கட்ட ஏற்கனவே திட்டம் போட்டிருந்த அன்னபிரியா, கணவருக்குக் கொடுத்த கஷாயத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடிக்கக் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட்டார் தயானந்த்.
இதுதான் தக்க சமயம் என்று கருதிய அன்னபிரியா, தனது ஆண் நண்பர் முருகனுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதிகாலை வேளையில் வீட்டுக்கு வந்த முருகன், அங்கிருந்த உருட்டுக் கட்டையால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தயானந்தை சரமாரியாக தாக்கியுள்ளார். தூக்கம் கலைந்து அவர் எழுந்து தாக்குதலைத் தடுக்க முயன்றும், சரமாரியான தாக்குதலால் அவர் நிலைகுலைந்தார். இந்த தாக்குதலில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
முருகன் இறந்துவிட்டதை உறுதிசெய்த அன்னபிரியா, முருகனை வீட்டின் பின்பக்கமாக அனுப்பிவைத்துவிட்டார். பின்னர் அவரே பாத்திரங்களை உருட்டிவிட்டும், கணவருக்கு என்னவோ ஆச்சு என்று ஊராரை நம்பவைக்க அலறிக்கூச்சலும் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, கணவருக்கு வலிப்பு ஏற்பட்டும், ரத்த வாந்தி வந்தும் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். உயிருக்குப் போராடியபோது கட்டில் மீது பலமாக மோதிக்கொண்டதாகவும் கூறி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.
சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் சம்பவத்தின்போது கேமரா இயங்குவதை நிறுத்தி வைத்திருந்துள்ளனர். இந்த வழக்கில் அன்னபிரியா, அவருடைய ஆண் நண்பர் முருகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் சங்ககிரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (அக். 12) ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் முருகனை சேலம் மத்திய சிறையிலும், அன்னபிரியாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.
இதற்கிடையே, தயானந்த் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)