Skip to main content

என் சாதி கசக்குது... நான் சுமக்கும் வாரிசு மட்டும் இனிக்குதா? பெண் மருத்துவரின் விபரீத செயல்!

Published on 20/05/2022 | Edited on 21/05/2022

 

Salem female doctor case

 

 


சாதி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு, சேலம் பெண் மருத்துவரும் திருமணமான ஒன்பதே மாதத்தில் தன் வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார். கூடவே, அவருடைய வயிற்றில் வளர்ந்த சிசுவும் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 


சேலம் வீராணத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27). இருவருமே மருத்துவர்கள். ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தபோது, சீனியரான சந்தோஷ்குமாரும், ஜூனியரான கவுசல்யாவும் காதல் வயப்பட்டுள்ளனர். பயிற்சி மருத்துவர்களாக இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்தபோது, அவர்களிடையே காதல் மேலும் இறுக்கம் அடைந்துள்ளது.


கவுசல்யா, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சந்தோஷ்குமார், கன்னட தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு முன்பு எல்லா இளைஞர்களுமே கம்யூனிஸ்ட்டுகள்தான் என்பார்கள். அதேபோல, காதலிக்கும்போது சந்தோஷ்குமாருக்கு காதலியின் சாதி பெரிதாக தெரியவில்லை. ஆனால், அவருடைய பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், பெண் வீட்டில் சந்தோஷ்குமாரை ஏற்றுக்கொண்டனர். 


ஆகையால் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்க வேண்டிய திருமணம், பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் தலைமையில், 9 மாதத்திற்கு முன்பு நடந்தது. கவுசல்யாவின் பெற்றோரும், சந்தோஷ்குமாரை மருமகனாக அல்லாமல் மகனாகவே பார்க்கத் தொடங்கினர். திருமணமான புதிதில் சில மாதங்கள் கவுசல்யாவின் பெற்றோர் வீட்டில்தான் இளம் தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 


இந்த நிலையில், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கவுசல்யாவும், மற்றொரு தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமாரும் வேலைக்குச் சேர்ந்தனர். இதற்காக அவர்கள், அஸ்தம்பட்டியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இது ஒருபுறம் இருக்க, இருவருமே மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர். அதேநேரம், அவர்கள் மத்திய அரசுப் பணியில் சேரவும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். 


இந்த நிலையில்தான் சமீபத்தில் சேலம் இரும்பாலையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் பணிக்கான நேர்காணல் நடந்துள்ளது. இதில், கவுசல்யா தேர்வு செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் தேர்வாகவில்லை. மனைவிக்கு வேலை கிடைத்ததை கொண்டாட வேண்டிய சந்தோஷ்குமாரோ, இப்போதைக்கு வேலைக்குப் போக வேண்டாம் என தடுத்திருக்கிறார். தற்போது அவர், பத்து வார கால கர்ப்பிணியாக இருந்ததால், அவரை நேர்காணல் செய்தவர்களும் உடனடியாக பணியமர்த்தம் செய்வதிலும் தயக்கம் காட்டினர். 


மனைவிக்கு மட்டும் வேலை கிடைத்ததால் கணவருக்கு 'ஈகோ' ஏற்பட்டதால் அவரை வேலைக்குச் செல்லாமல் தடுப்பதாகத்தான் முதலில் சொல்லப்பட்டது. கணவரின் தொந்தரவு எல்லை மீறியதால், பொறுமை இழந்த கவுசல்யா இது தொடர்பாக சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், கவுசல்யாவின் சீற்றத்திற்கு கணவரின் 'ஈகோ' மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள் காவல்துறையினர். 


நாம் அவர்களிடம் பேசினோம். ''கவுசல்யா அளித்த புகாரின்பேரில், அவரையும் அவருடைய கணவரையும் நேரில் அழைத்துப் பேசினோம். அண்மையில், சேலம் இரும்பாலையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் பணிக்கான நேர்காணலுக்குக் கூட சந்தோஷ்குமார்தான் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். நேர்காணலில் கவுசல்யா மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ்குமார் தேர்வு ஆகவில்லை. அன்று நள்ளிரவு, சந்தோஷ்குமார் நேர்காணல் செய்த குழுவினரிடம் தனக்காகவும் பேசும்படி கூறியுள்ளார். எனக்கு வேலை கிடைக்காவிட்டால் நீயும் அந்த பணியில் சேர வேண்டாம் என கூறியுள்ளார். 


இப்படிச் சொல்லவும், எனக்கு மட்டும் வேலை கிடைத்ததால் உனக்கு பொறாமையா? என கவுசல்யா கேட்க, அவர்களுக்குள் வாய்த்தகராறு வெடித்துள்ளது. இருவரும் பழைய சம்பவங்களை எல்லாம் தோண்டி எடுத்து திட்டிக்கொண்டனர். இதற்கிடையே, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது கவுசல்யாவிடம், அவருடைய சாதியை குறிப்பிடாமல் 'ஜெனரல்' என்று குறிப்பிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு கவுசல்யா, ’ஏன் நான் எஸ்.சி.,தானே? அதை குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?,' எனக் கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


நீட் விண்ணப்பத்தில் சாதியைக் குறிப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் அவர்களின் விவகாரம் காவல்நிலையம் வரை வர வைத்துள்ளது. சந்தோஷ்குமார் வெளிப்படையாக சாதிய போக்குடன் நடந்து கொள்ளாவிட்டாலும், மனைவியிடம் 'ஜெனரல்' என்று குறிப்பிடும்படி வற்புறுத்தியதும் சாதிய வன்கொடுமைதான். 


சம்பவத்தன்று இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று கவுசல்யா மயங்கி விழுந்துவிட்டார். மனைவியை கட்டுப்படுத்த முடியாத இயலாமையில் சந்தோஷ்குமாரும் கத்தியால் கையில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவர் அப்படிச் செய்வது முதல்முறை அல்ல. ஏற்கனவே ஒருமுறை இதேபோல் மனைவியுடன் தகராறு ஏற்பட்டபோதும், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். 


அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட சந்தோஷ்குமார், தனது நண்பர் கணேஷ் என்பவரை வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து கவுசல்யாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவர்கள் கேட்டபோது, வாந்தி எடுத்தபோது மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 


மறுநாள், இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடித்துள்ளது. கவுசல்யாவை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். சந்தோஷ்குமாரும் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இது ஒருபுறம் இருக்க, சாதிய போக்குடன் கணவர் நடந்து கொள்வதை பிடிக்காத கவுசல்யா, அவர் மூலம் தன் வயிற்றில் உருவான வாரிசு மட்டும் எதற்கு? என்று தீர்மானித்து, சேலம் அரசு மருத்துவமனையில் 10 வார காலமாக வளர்ந்திருந்த கருவையும் கலைத்து விட்டார். 


இன்ஸ்பெக்டர் சிவகாமி, உதவி கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் அவர்களை அழைத்துப் பேசியும் அவர்களுக்குள் இணக்கமான உறவை மீண்டும் உருவாக்க முடியவில்லை. கவுசல்யா அளித்த புகாரின்பேரில் சந்தோஷ்குமார் மீது இதச பிரிவுகள் 294 பி, 323, 506 (2), 498 (ஏ) மற்றும் சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவருடைய நண்பர் கணேஷ் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறோம்'' என்கிறார்கள் காவல்துறையினர். 


 

 

சார்ந்த செய்திகள்