Skip to main content

ரஜினிக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் ரசிகர்கள் மனு!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

சேலத்தில், நடிகர் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மாநகர காவல்துறையில் சனிக்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.


அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். இதற்கு திக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராடி வருகின்றன. 

 Salem fans petition for Rajini's protection


இந்நிலையில் சேலத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பழனிவேல் தலைமையில் திரண்டு வந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் சனிக்கிழமை (ஜன. 25) ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:


நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விழாவில், பெரியார் பற்றி பேசினார். இதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லி விட்டார்.


போராட்டத்தில் ஈடுபடுவோர், ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால், அவருடைய படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று போராடுவோம் என்றும், அவர் நடித்த படம் வெளியாகாத வகையில் தடை கேட்டு வழக்கு தொடர்வோம் என்றும், தகாத வார்த்தைகளால் மிரட்டி வருகின்றனர். 


உண்மையில், நடிகர் ரஜினி பெரியார் பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான் அவர் பேசினார். எனவே ரஜினிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.