சேலத்தில் மக்களவை தேர்தல் பறக்கும் படை சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3.73 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

ro

மக்களவை தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, உரிய ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியும், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளருமான பிரபுகுமார் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள், சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை (மார்ச் 11, 2019) இரவு 9.45 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு சென்ற காரை சோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் உரிய ஆவணங்களின்றி 3 லட்சம் ரூபாய் கொண்டு செல்வது தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் ரோகிணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர், நிகழ்விடம் சென்று நேரில் பார்வையிட்டார். இதையடுத்து, அத்தொகையை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய தணிக்கையில், சேலம் பேர்லேண்ட்ஸை சேர்ந்த சேகர் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி 73300 ரூபாய் கொண்டு செல்வது தெரிந்தது. அத்தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை அனைத்தும், சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.