ADVERTISEMENT

எட்டு வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

07:50 AM Dec 15, 2018 | elayaraja

ADVERTISEMENT


சேலத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 14, 2018) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT


சேலம் - சென்னை இடையில் எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 90 சதவீதம் நிலம், சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமானது.


இந்த திட்டத்தால் ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமும் அழிந்து விடும் என்பதால் இத்திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து பொதுமேடைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று பேசி வருகிறார். விவசாயிகள் எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.


இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியில் விவசாயி செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமையன்று (டிச. 14) ஒன்று திரண்டு, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'வாழவிடு வாழவிடு மக்களை வாழவிடு', 'வேண்டாம் வேண்டாம் எட்டுவழிச்சாலை வேண்டாம்', 'அழிக்காதே அழிக்காதே விவசாயிகளை அழிக்காதே' என்று முழக்கங்களை எழுப்பினர். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். நாழிக்கல்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.


விவசாயிகளின் இந்த திடீர் எழுச்சியை முன்பே அறிந்திருந்த உளவுத்துறை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய விவசாயிகள் சிலரை நேரில் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் இருப்பதால் போராட்டத்தைக் கைவிடும்படி நெருக்கடி கொடுத்தனர். பின்னர், சாமியானா பந்தல் போடக்கூடாது. மைக்செட் கட்டக்கூடாது போன்ற நிபந்தனைகளை மட்டும் வாய்மொழியாக சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


போராட்டம் குறித்து விவசாயிகள் மோகனசுந்தரம், நாராயணன் ஆகியோர் கூறுகையில், ''எட்டு வழிச்சாலைக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகிறோம். விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட காவல்துறை அனுமதிக்க மறுக்கிறது. எட்டுவழிச்சாலையே வேண்டாம் என்று கோரி வரும் நிலையில், இப்போது கூடுதலாக நிலங்களை கையகப்படுத்த மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகள்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இன்று நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அடுத்தக்கட்டமாக முதல்வர் எடப்பாடி ப-ழனிசாமியின் வீட்டை முற்றுகையிட்டும், தமிழக சட்டப்பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துவோம். எங்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தால் தற்கொலை போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT