Skip to main content

எட்டு வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

 

f


சேலத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 14, 2018) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் - சென்னை இடையில் எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 90 சதவீதம் நிலம், சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமானது.

 

n


இந்த திட்டத்தால் ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமும் அழிந்து விடும் என்பதால் இத்திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து பொதுமேடைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று பேசி வருகிறார். விவசாயிகள் எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.


இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியில் விவசாயி செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமையன்று (டிச. 14) ஒன்று திரண்டு, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

m

 

'வாழவிடு வாழவிடு மக்களை வாழவிடு', 'வேண்டாம் வேண்டாம் எட்டுவழிச்சாலை வேண்டாம்', 'அழிக்காதே அழிக்காதே விவசாயிகளை அழிக்காதே' என்று முழக்கங்களை எழுப்பினர். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். நாழிக்கல்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.


விவசாயிகளின் இந்த திடீர் எழுச்சியை முன்பே அறிந்திருந்த உளவுத்துறை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய விவசாயிகள் சிலரை நேரில் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் இருப்பதால் போராட்டத்தைக் கைவிடும்படி நெருக்கடி கொடுத்தனர். பின்னர், சாமியானா பந்தல் போடக்கூடாது. மைக்செட் கட்டக்கூடாது போன்ற நிபந்தனைகளை மட்டும் வாய்மொழியாக சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


போராட்டம் குறித்து விவசாயிகள் மோகனசுந்தரம், நாராயணன் ஆகியோர் கூறுகையில், ''எட்டு வழிச்சாலைக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகிறோம். விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட காவல்துறை அனுமதிக்க மறுக்கிறது. எட்டுவழிச்சாலையே வேண்டாம் என்று கோரி வரும் நிலையில், இப்போது கூடுதலாக நிலங்களை கையகப்படுத்த மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகள்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இன்று நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அடுத்தக்கட்டமாக முதல்வர் எடப்பாடி ப-ழனிசாமியின் வீட்டை முற்றுகையிட்டும், தமிழக சட்டப்பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துவோம். எங்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தால் தற்கொலை போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைத் தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழப்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Farmer incident by mountain bees

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வாரப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த பணி காரணமாக காப்பிலியபட்டிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் தனது பணிகளை முடித்துக் கொண்டு கல்வாரப்பட்டிக்கு திருப்பிக் கொண்டிருந்துள்ளார்.

இவர் மா.மு. கோவிலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த தேன் கூடு கலைந்து ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறியுள்ளன. இந்த தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்த விவசாயி காளியப்பனை கொட்டியுள்ளன. இதனால் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவ்வழியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 8க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் வந்த வினை! விவசாயி அடித்து கொலை!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Farmer passed away police arrested one

 

கிருஷ்ணகிரி அருகே, பலர் முன்னிலையில் அடித்து அவமானப் படுத்தியதால் விவசாயியை அடித்துக் கொலை செய்த டேங்கர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நாரணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுமித்ரா (37). இதே ஊரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (40). டேங்கர் லாரி ஓட்டுநர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், சுமித்ராவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சுமித்ராவின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த அவருடைய உறவினரான விவசாயி திம்மராஜ் என்பவர் நரசிம்மனை தாக்கியுள்ளார். 


இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.14) மாலை, நாரணிகுப்பத்தில் இருந்து திம்மராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார்மெண்ட் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திம்மராஜை தடுத்த நிறுத்திய நரசிம்மன், எப்படி என்னை அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். 


அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நரசிம்மன், அங்கிருந்த கட்டையை எடுத்து திம்மராஜை சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடிவருவதைப் பார்த்த நரசிம்மன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் திம்மராஜை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து, நரசிம்மனை கைது செய்தார். விசாரணையில், ''திம்மராஜ் ஊர் மக்கள் முன்னிலையில் என்னை தாக்கி அவமானப்படுத்தினார். சம்பவத்தன்று இதுகுறித்து கேட்டபோதும் அவர் ஆபாசமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கட்டையால் தாக்கினேன். அவர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். அவர் இறந்து போவார் என்று நான் நினைக்கவில்லை'' என்று நரசிம்மன் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.