/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eight road 1.jpg)
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சேபனைக்குரிய பகுதியில் மரக்கன்று நட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் வரும் இந்த சாலை மொத்தம் 277.3 கி.மீ. நீளத்துக்கு அமைகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eight road 2.jpg)
பசுமைவழிச்சாலை திட்டத்தால் மரங்களும், விளைநிலங்களும் அழிக்கப்படுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசோ, இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வருகிறது.
இதற்கிடையே ஒரு தரப்பினர், திட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கு முடியும் வரை எட்டு வழிச்சாலைக்கான பணிகளை நிறுத்தி வைக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை கிஞ்சித்தும் சட்டை செய்யாத தமிழக வனத்துறை, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக அங்கிருந்த 128 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியது.
இச்செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர்நீதிமன்றம், மரம்வெட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் இணையாக பத்து புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் மரம் வெட்டிகளோ, உடந்தையாக இருந்த வனத்துறையினரோ உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இதுவரை மசியவில்லை.
இந்நிலையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் எட்டு வழிச்சாலைக்காக எங்கெங்கெல்லாம் மரங்கள் வெட்டப்பட்டனவோ, அங்கெல்லாம் புதிய மரக்கன்றுகளை நடுவதென முடிவெடுத்தனர். அதன்படி, சேலத்தை அடுத்த ஏரிக்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே, மரக்கன்றுகளை நடுவதற்காக சனிக்கிழமை (10.11.2018) காலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடினர்.
இதுகுறித்து முன்பே தகவல் கசிந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎஸ்பி சுரேஷ்குமார், டிஎஸ்பிக்கள் அண்ணாமலை, சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட நூறுக்கும் மேற்பட்ட போலீசார் நிகழ்விடத்தில் குவி க்கப்பட்டனர். மக்கள் ஏதேனும் அத்துமீறினால் அவர்களைக் கைது செய்யும் திட்டத்துடன் தயார் நிலையில் வந்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eight road3.jpg)
ஏரிக்காடு மாரியம்மன் கோயில் பகுதியில் மரக்கன்று நடுவதாகச் சொல்லப்பட்ட இடம் எட்டு வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்ட இடம் என்பதால், அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர். வாழப்பாடி தாசில்தார் வள்ளிதேவி, ஆர்ஐ சரஸ்வதி ஆகியோரும் அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், ஏரிக்காடு பகுதியில் திடீரென்று அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ''மரங்களை வெட்டியவர்களை விட்டு விடுகிறீர்கள். உலகம் செழிப்பதற்கு மரக்கன்று நட்டு பராமரிக்க வந்திருக்கும் எங்களை சட்டத்தைக் காட்டி தடுப்பது நியாயமா? புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத்தேவை இல்லை. சுதந்திர நாட்டில் மரக்கன்று நடுவதற்குக்கூட உரிமை இல்லையா?,'' என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, மரம் நட தீர்மானிக்கப்பட்ட கோயிலின் தர்மகர்த்தாவை அழைத்து வந்த போலீசார், அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். அதற்கு முதல் நாள் இரவு, அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிப்பதாக ஊர் மக்களிடம் ஒப்புக்கொண்டிருந்த தர்மகர்த்தா போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து, சாலை மறியலின்போது திடீரென்று பல்டி அடித்தார்.
தொடர்ந்து அதிகாரிகள், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி, கலைந்து செல்லும்படி மன்றாடினர். பின்னர், மூன்று நாள்கள் அவகாசம் தரும்படியும், அதற்குள் மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அனுமதி வழங்கப்படும் என்றும் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த மரக்கன்றுகளை மறியல் நடந்த பகுதியில் சாலையோரமாக நட்டு, தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றனர்.
போராட்டக் குழுவினர், 'மரம்வெட்டி அரசே மரக்கன்று நடுகிறோம் பார்', 'சுரண்டாதே சுரண்டாதே இயற்கையை சுரண்டாதே', 'அழிக்காதே அழிக்காதே இயற்கையை அழிக்காதே', 'நிலம் எங்கள் உரிமை தமிழக அரசே நிலத்தை விட்டு வெளியேறு' என்று எழுதப்பட்ட பதாகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின்போது ஏடிஎஸ்பி சுரேஷ்குமார், போராட்டக்குழுவில் இருந்த இளைஞர் அருளைப் பார்த்து நீ யார்? நீ இந்த ஊரைச் சேர்ந்தவரா? எதற்காக இங்கே பேசுகிறாய்? என்று கேள்வி எழுப்பினார். அதுவரை சமாதானத்தை நோக்கிச் சென்ற பேச்சுவார்த்தை ஏடிஎஸ்பியின் இந்தக் கேள்வியால் மீண்டும் இருதரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதத்தை உருவாக்கியது.
மூன்று நாள் அவகாசம் கழிந்த பின்னர், போலீசார் அனுமதி கொடுத்தாலும் இல்லாவிட்டாலும், புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்படும் என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)