பட்டாசு வெடி விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்!

salem dt Kanchanayakanpatti incident CM mk stalin condolences

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்கு உட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராமம். இங்குள்ள பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (25.4.2025) இரவு சுமார் 8.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழ்செல்வன் (வயது 11) மற்றும் கார்த்தி (வயது 11) சுப்பிரமணி ஆகிய 3 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டாசு வெடித்துச் சிதறியதில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

CM RELIEF FUND crackers incident mk stalin Salem
இதையும் படியுங்கள்
Subscribe