Salem drunken person struggle with police viral video

சேலம் அருகே, பட்டப்பகலில் குடிபோதையில் இருந்தஒருவர் திடீரென்று ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டு, பணியில் இருந்த காவலரை தாக்கியதோடு, ஆபாசமாக திட்டிய காணொளிகாட்சிகள், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

சேலம், காக்காபாளையம் பிரிவு சாலையில் கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவலர்கள் இருவர், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு முதியவரை மடக்கி விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையில் அவர், சீரகாபாடியைச் சேர்ந்த ரவி (59) என்பதும், உணவகம் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணை செய்ததால், என்ன நினைத்தாரோ திடீரென்று ரவி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும், தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி வீசியெறிந்த அவர், சீருடையில் பணியில் இருந்த காவலர் ஒருவரை பாய்ந்து சென்று முகத்தில் தாக்கியதோடு, தகாத வார்த்தைகளாலும் சரமாரியாக திட்டினார்.

நிர்வாண நிலையில் அந்த முதியவர் திட்டுவதும், காவலரை தாக்கும் காட்சிகளும் கொண்ட காணொளிபதிவு, வியாழக்கிழமை (ஆக. 26) வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காவலர்களிடம், ''சார் அவனுக்கு நாலு அடி போடுங்க சார்...'' என்றும் தெரிவிக்கும் காட்சியும் அதில் உள்ளது. அதற்கு அடிவாங்கிய காவலரோ, ''வேணாம் வேணாம்... அப்புறம் நாங்க அடிச்சததான் பெரிசா வீடியோ போடுவாங்க. அவன் என்ன பண்ணனுமோ பண்ணட்டும்... நடப்பதை வீடியோவில் பதிவு செய்யறோம்,'' என்று சொல்லிவிட்டு, குடிபோதை ஆசாமியின் அலப்பறைகளை செல்போன் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

Advertisment

காவலர்களின் நிலையைக் கண்டு பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போதை ஆசாமி ரவியை குண்டுக்கட்டாக ஜீப்பில் தூக்கிப்போட்டுக் கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்றனர்.அவர் மீது ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறிது நேரத்தில் அவரை எச்சரித்து, பிணையில் விடுவித்தனர்.இது ஒருபுறம் இருக்க, போதை ஆசாமியால் தாக்கப்பட்ட அந்தக் காவலரும், ஒரு குரல் பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், ''பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினரை ஒருவர் அடிக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கரோனா பரிசோதனைக்குப் பிறகு, சிறையில் அடைக்காமல், பிணையில் விட்டுவிட்டனர்.இதனால் எனக்கு மட்டும் அவமானம் இல்லை. ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும்தான் அவமானம். எனவே, இனிமேல் சாப்பாட்டில் நான் உப்பு போட்டு சாப்பிட மாட்டேன்” எனவிரக்தியாக தெரிவித்துள்ளார்.

போதை ஆசாமி காவலரை தாக்கும் காட்சிகளும், காவலரின் குரல் பதிவும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வாழப்பாடி அருகே, குடிபோதை ஆசாமி ஒருவரை காவல்துறையினர் வாகனச் சோதனையின்போது தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சில குடிபோதை ஆசாமிகள், அரசியல் பின்புலம் உள்ள ஆசாமிகள் சிலர் காவல்துறையினரை பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது.