Skip to main content

சேலத்தில் பாகனை கொன்ற ஆண்டாள் யானை ஆனைமலைக்கு மாற்றம்; உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

சேலத்தில் பாகனை காலால் மிதித்துக் கொன்ற ஆண்டாள் யானை, பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை காப்பகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மூடப்பட்ட உயிரியல் பூங்கா மீண்டும் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.


மதுரை அழகர் கோயிலில் இருந்த ஆண்டாள் யானை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. 'பேடி' (மனிதர்களில் திருநங்கை, திருநம்பி எப்படியோ அப்படியான வகை) வகையான இந்த யானை, அழகர் கோயிலில் இருந்தபோது மூன்று பேரை கொன்றுள்ளது. அதையடுத்தே அங்கிருந்து சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டது.


சேலம் உயிரியல் பூங்காவில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்த பத்மினி என்பவரையும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது.

salem district andal elephant incident aanaimalai camp


இந்நிலையில் டிசம்பர் 2ம் தேதி, கால்நடைத்துறை மருத்துவர் ஒருவர் ஆண்டாள் யானையை பரிசோதிப்பதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென்று மதம் பிடித்ததுபோல் நடந்து கொண்ட அந்த யானை, பாகன் காளியப்பன் என்பவரை காலால் மிதித்துக் கொன்றது. கால்நடை மருத்துவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.


இதையடுத்து அந்த யானையை உயிரியல் பூங்காவில் வைத்து தொடர்ந்து பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பூங்காவும் மூடப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஆண்டாள் யானையை பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தது.


அதையடுத்து, ஆனைமலை காப்பகத்தில் இருந்து பத்து ஊழியர்கள் சேலத்திற்கு வந்திருந்தனர். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி முன்னிலையில், ஆனைமலை காப்பக ஊழியர்கள் ஆண்டாள் யானையை வியாழக்கிழமை இரவு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 


இதுகுறித்து வனத்துறை தரப்பில் கேட்டபோது, ''ஆண்டாள் யானை, பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து டாப்சிலிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்குக் கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது,'' என்றனர்.


இதையடுத்து, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.