salem district yercaud guest house incident police investigation

ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில், ஆடைகள் களைந்த நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. தவறான தொடர்பால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஏற்காடு முண்கடம்பாடி பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆண் ஒருவருடன் தங்கியிருந்த பெண், வியாழக்கிழமை (ஜன. 6) அதிகாலையில் தனது அறைக்குள் நிர்வாண நிலையில் தூக்கில் சடலமாகக் கிடந்தார்.

Advertisment

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபர், ஏற்காடு காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு தனது அண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்தார்.

சேலம் ஊரக டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாகக் கிடந்த பெண்ணின் பெயர் மஞ்சு (வயது 29) என்பதும், அவருடன் தங்கியிருந்த வாலிபர் பெயர் விஜய் (வயது 30) என்பதும், மஞ்சுவின் கணவர் பிரபுவின் உடன் பிறந்த தம்பிதான் இந்த விஜய் என்பதும் தெரிய வந்தது.

இவர்களின் சொந்த ஊர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமம் ஆகும். பிரபு, சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது தனிமையில் இருந்த மஞ்சுவும், அவருடைய கொழுந்தனும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இருவரும் ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி சென்று விடுதிகளில் அறை எடுத்து தங்கி, நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

விஜயைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, பிரபுவும், மஞ்சுவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மஞ்சுவுக்கு, விஜய் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பிரபு வெளிநாடு சென்றுவிட்டார். பிரபு இல்லாதது அவர்களுக்கு மேலும் வசதியாகப் போய்விட்டது.

இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களிலும், வெளியூர்களுக்குச் சென்றும் அடிக்கடி தனிமையில் ரொம்பவே நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், விஜய்க்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கினர். சமீபத்தில் ஒரு பெண் நிச்சயிக்கப்பட்டு, அவருடன் வரும் ஜனவரி 23- ஆம் தேதி விஜய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன.

இதையறிந்த மஞ்சு, திருமணம் ஆனால் எங்கே விஜய் நம்மை கைவிட்டு விடுவாரோ என்று எண்ணி, வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விஜய்யிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மஞ்சுவுக்கு, வேறு ஒரு ஆணுடனும் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மஞ்சு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று வருவதாகவும், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும் கூறிவிட்டு விஜய்யும் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர்.

பேருந்து மூலமாக சேலம் வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து ஏற்காட்டிற்குச் சென்று தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அன்றிரவு இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

அதன்பிறகு வேறு பெண்ணை விஜய் மணக்க இருப்பதை மஞ்சு கண்டிக்க, அவர் வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பதை விஜய் கண்டிக்க, இருவருக்கும் அதே அறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் சமாதானமாகி தூங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஜன. 6- ஆம் தேதி அதிகாலையில் குளியறைக்குள் தூக்கிட்டு மஞ்சு சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை விஜய் பார்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

எனினும், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தால் எதற்காக மஞ்சு நிர்வாண நிலையில் தூக்கிட்டுக் கொள்ள வேண்டும்? ஒருவேளை தன்னுடைய திருமணத்திற்கு அண்ணி மஞ்சு குறுக்கே நிற்பாரோ என்றெண்ணி அவரை விஜயே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.