Skip to main content

ஏற்காட்டில் வடமாநில தம்பதி வெட்டி கொலை; போலீசார் விசாரணை!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

 

salem district yercaud couple incident police investigation

 

 

ஏற்காட்டில் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடையில், சேலத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரோரோ எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக எஸ்டேட் அருகிலேயே 8 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

 

இங்குள்ள ஒரு வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொண்டா பஹான் (41), அவருடைய மனைவி சுதிகென்ஸ் (36) ஆகியோர் தங்கியிருந்தனர். புதன்கிழமை (செப். 30) காலை நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி இருவரும் கதவைத் திறக்கவில்லை. வேலைக்கும் வரவில்லை.

 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவு உள்தாழ்ப்பாள் போடாமல் லேசாக திறந்து இருந்தது தெரிய வந்தது. உள்ளே எட்டி பார்த்தபோது, வீட்டுக்குள் கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பது தெரிந்தது.

 

இதுகுறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று சடலங்களை மீட்டனர். சடலங்களை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வீடு முழுவதும் ரத்தம் படிந்து இருந்தது. மர்ம நபர்கள் அவர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சுதிகென்சின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. அரை நிர்வாணமாக கிடந்த அவருடைய உடல் மீது கொண்டா பஹான் உடல் கிடந்தது.

 

காவல்துறை விசாரணையில், சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கைரா புத்ரா, ராம்சோநாக் ஆகிய இருவரும் திடீரென்று காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

 

செவ்வாய்க்கிழமை (செப். 29) இரவு, கொண்டா பஹான், சுதிகென்ஸ், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கைரா புத்ரா, ராம்சோநாக் ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குடிபோதையில் சுதிகென்சிடம் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்திருக்கலாம் அப்போது இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு எழுந்துள்ளது.

 

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சில முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில், காவல்துறையினர் வந்தபோது கதவு உள்புறமாக தாழிட்டது யார் என்றும் விசாரித்து வருகிறார்கள்.

 

சேலம் புறநகர் டிஎஸ்பி உமாசங்கர், சங்ககிரி டிஎஸ்பி ரமேஷ்பாபு, ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தலைமறைவான கைரா புத்ரா, ராம்சோநாக் ஆகியோர் மலை கிராமங்களில் எங்காவது ஒளிந்திருக்கலாம் என்ற தகவலால் ஏற்காட்டைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்