salem district womens police investigation

பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்களே அதுபோல, உதவி செய்தாலும் தீர விசாரித்துதான் உதவ வேண்டும்; இல்லாவிட்டால், உதவி செய்பவர் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதற்கேற்ப சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயி. இவருடைய மனைவி மலையம்மாள் (வயது 60). வியாழக்கிழமை (அக். 14) மதியம், தனது தோட்டத்தில் விளைந்த துளசியைப் பறித்து சேலம் கடைவீதிக்குக் கொண்டு சென்று விற்றுவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

Advertisment

அப்போது, சுமார் 35 வயதுள்ள இரண்டு பெண்கள் அவர் அருகே வந்து, ''நாங்கள் சென்னையில் இருந்து வருகிறோம். சேலத்தில் நாங்கள் தேடி வந்த நபரின் முகவரி, செல்போன் நம்பர்களைத் தொலைத்து விட்டோம். உடனடியாக ஊர் திரும்ப முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் இன்று ஒருநாள் இரவு மட்டும் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்து உதவ வேண்டும்,'' என்று பரிதாபமாகக் கேட்டனர்.

இதற்கு மலையம்மாள் உடனடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இரண்டு பெண்களும் கண்ணீர் சிந்தியபடி கேட்டதால், கடைசியில் மனம் இரங்கினார்.

Advertisment

இதையடுத்து அவர்களை பேருந்தில் அழைத்துச் செல்ல முயன்றார். திடீரென்று அந்த இரு பெண்களும், ''எங்களுடைய சித்தப்பா மகன்கள் இரண்டு பேர், மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அவர்களுடன் மோட்டார் சைக்கிளிலேயே சென்று விடலாம்,'' என்று கூறியுள்ளனர்.

இப்போதாவது மலையம்மாள் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன நினைத்தாரோ அவர்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்தப் பெண்கள் கூறியபடி இரண்டு வாலிபர்கள் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் மலையம்மாளையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவருடைய வீட்டுக்குச் சென்றனர்.

இரவு படுக்கைக்குச் செல்லும்போது, மர்ம பெண்களில் ஒருவர் திடீரென்று தான் கழுத்தில் அணிந்திருந்த ஒரு செயினை கழற்றி மலையம்மாளிடம் கொடுத்து, இதை நீங்கள் நகைகள் வைக்கும் பீரோவிலேயே வைத்திருங்கள். காலையில் கிளம்பும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி கொடுத்துள்ளார். அந்த செயினை வாங்கி பீரோவில் வைத்தார் மலையம்மாள்.

alt="p" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3b3828eb-fabd-451b-af59-13e5d35f50a8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_168.jpg" />

அன்று இரவு, வீட்டுக்குள் மலையம்மாளின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்களும், வீட்டுக்கு வெளியே திண்ணையில் மலையம்மாளுடன் அந்த மர்மப் பெண்கள் இருவரும் படுத்துக் கொண்டனர்.

நள்ளிரவு 01.00 மணியளவில் திடீரென்று உறக்கம் கலைந்து எழுந்த அண்ணாமலை, தன் பக்கத்தில் படுத்திருந்த இரண்டு வாலிபர்களையும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளியே மனைவி அருகில் படுத்திருந்த மர்மப் பெண்களும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக மனைவியை எழுப்பிய கணவர், பீரோவைத் திறந்துப் பார்த்தார். அப்போது மலையம்மாளின் 8 பவுன் நகைகள் மற்றும் மர்மப் பெண்கள் கழற்றிக் கொடுத்த ஒரு செயின் ஆகியவையும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. அடைக்கலம் கேட்டு வந்த அந்த மர்ம நபர்கள்தான் நகைகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது.

தங்களை திட்டமிட்டு ஏமாற்றிய அந்த திருட்டுக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பனமரத்துப்பட்டி காவல்நிலையத்தில் அண்ணாமலை புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உதவி செய்தாலும் ஆபத்துதான் என்றும், உண்ட வீட்டுக்கே இரண்டகம் ஆன கதை என்றும் உள்ளூரில் காண்போரிடம் எல்லாம் அண்ணாமலை புலம்பி வருகிறார்.