/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem1121.jpg)
சேலம் அருகே, எலும்புக்கூடாக கைப்பற்றப்பட்டது ஒரு பெண் என்பதும், திருமணம் மீறிய உறவால்அவர் கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழிப்பறி குற்றவாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள டால்மியாபுரம் பர்ன் அன் கோ நிறுவனத்தின் பின்பகுதியில் கடந்த 11- ஆம் தேதி ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. எலும்புக்கூட்டை கைப்பற்றி கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.
உடற்கூராய்வில் அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்பதும், உத்தேச வயதும், இயற்கைக்கு மாறாக மரணம் சம்பவத்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கருப்பூர், ஓமலூர், சேலம் சுற்றுவட்டாரத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை காவல்துறையினர் தண்டோரா போட்டு விசாரித்து வந்தனர்.
காவல்துறை விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர், சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 30) என்பது தெரிய வந்தது. இவருக்கும், வெள்ளைக்கல் பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவுஇருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரபாகரனைப் பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கடந்த மார்ச் 3- ஆம் தேதி, ராஜேஸ்வரியை டால்மியாபுரத்திற்கு அழைத்துச்சென்ற பிரபாகரன், அங்கு அவருடன் 'நெருக்கமாக' இருந்துள்ளார். அப்போது ராஜேஸ்வரி பணம் கேட்டுள்ளார். பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரபாகரன், ராஜேஸ்வரியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கில் சிறை சென்றிருந்த பிரபாகரன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிணையில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். அதன்பிறகு ராஜேஸ்வரியை கொலை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)