/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kirubakarna333.jpg)
சேலத்தில், முன்விரோதத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). ரவுடியான இவர், சேலம் ஆனந்தா பாலம் அருகில் உள்ள காய்கறி சந்தையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.
சனிக்கிழமை (ஏப். 10) இரவு, ஆனந்தா பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் அமர்ந்து கிருபாகரன் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களான மேட்டுத்தெருவைச் சேர்ந்த அஹமதுஹூசேன் (வயது 30), பட்டைக்கோயில் அருகில் வசிக்கும் சீனிவாசன் (வயது 27) ஆகியோரும் அவருடன் ஒன்றாக மது அருந்தினர்.
அதே மதுக்கூடத்தில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மோகன் (வயது 27), அவருடைய நண்பர்களான கோகுலகிருஷ்ணன், பூலை மோகன், சுரேஷ் ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் மோகன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருபாகரனின் நண்பர் ஒருவரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.
இதையறிந்த கிருபாகரன், மோகனை கண்டித்ததுடன், இனிமேல் அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஏப். 10- ஆம் தேதி மதுக்கூடத்தில் வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு வெடித்ததில் மோகனும், அவருடைய கூட்டாளிகளும் மது புட்டிகளை உடைத்து திடீரென்று கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தினர். கிருபாகரனின் வயிற்றில் கத்தியாலும் குத்தியுள்ளனர். தகராறை விலக்கிவிட முயன்ற பட்டைக்கோயில் தெருவைச் சேர்ந்த அம்ஜத் (வயது 30) என்பவருக்கும் மது புட்டியால் குத்து விழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் நகர காவல் உதவி ஆணையர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சிவகுமார் (பொ) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட மோகனும், கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன், அம்ஜத் ஆகியோர் மீட்கப்பட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மோகனை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெண் விவகாரத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளதும், அதனால் ஏற்பட்ட கைகலப்பில் கொலை நடந்துள்ளதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் மோகன் கூட்டாளிகள் மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொலையுண்ட கிருபாகரன் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் அடிதடி தொடர்பாக 5 வழக்குகளும், ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)