கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவும், சமூக விலகல் விதிகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. உணவுப்பொருள் வாங்குதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொது வெளியில் நடமாடலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
வார இறுதி நாள்களில் இறைச்சிக் கடைகளில் அசைவப் பிரியர்கள் குவிந்து விடுவதோடு, அவர்கள் முகக்கவசம் அணியாமலும், ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளியில் நின்று இறைச்சியை வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விதிகளையும் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்டு வந்தனர். வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்துவது, அந்தந்த இறைச்சிக் கடைக்காரர்களின் பொறுப்பு என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. ஆனால், கசாப்புக் கடைக்காரர்களோ தங்களிடம் உள்ள ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்றுத் தீர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் வாடிக்கையாளர்களிடம் கெடுபிடி காட்டுவதில்லை.

இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மாநகரில் இறைச்சிக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் சனிக்கிழமை (ஏப். 11) திடீரென்று உத்தரவிட்டது.
ஆனாலும், ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப். 12) சில இடங்களில் அரசு உத்தரவை மீறி இறைச்சிக்கடைகள் திறந்திருந்தன. சில கசாப்புக் கடைக்காரர்கள் மறைமுகமாகக் கறியாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, வாடிக்கையாளர்களின் வீடு தேடிச்சென்று விற்பனை செய்தனர்.

இந்நிலையில், தடை உத்தரவை மீறி சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் ஒரு கோழிக்கறி கடையும், ஒரு ஆட்டிறைச்சி கடையும் ஞாயிறன்று செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர். அந்தக் கடைகளில் இருந்து 30 கிலோ கோழிக்கறி, 5 கிலோ ஆட்டுக்கறியைப் பறிமுதல் செய்தனர்.
அஸ்தம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் ஒருவர் கோழி இறைச்சியை பாலிதீன் பைகளில் போட்டு விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதிகாரிகள் வருவதை அறிந்ததும் சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்தில் இருந்து 35 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.