/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/goondas accuseds.jpg)
சேலத்தில், இரு வேறு கொலை வழக்குகளின் கீழ்3 ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் நாராயண நகரை சேர்ந்தவர் அஹமது பாஷா. இவருக்கும், களரம்பட்டி வீரவாஞ்சி தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஸ் (34), பாத்திமா நகரை சேர்ந்த மொய்தீன் பாஷா மகன் உமர் (34) ஆகியோருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த செப். 5- ஆம் தேதி, கிச்சிப்பாளையம் காந்தி சிலை அருகே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஸ், உமர் ஆகியோர் தாக்கியதில் அஹமது பாஷா இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் நகர காவல்துறையினர், மேற்படி இரு ரவுடிகளையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்த காணிபிச்சை மகன் மனோகரன் (21) என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வந்தார். இவர், சேலம் மேட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு கடந்த செப். 13- ஆம் தேதியன்று, வட்டிப்பணம் வாங்கச் சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்படும் டம்பிள்ஸால் பெண்ணை தாக்கினார். சேலையாலும் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தப் பெண் அணிந்திருந்த செயின், தோடு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் நகர காவல்துறையினர் மனோகரனை கைது செய்து, நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரவுடிகள் சதீஸ், உமர், மனோகரன் ஆகியோர் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கொலை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நகர காவல் ஆய்வாளர், துணை ஆணையர் ஆகியோர் மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில், காவல்துறை ஆணையர் செந்தில்குமார், ரவுடிகள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வெள்ளிக்கிழமை (அக். 30) உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)