salem

வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் சேலத்தில் கைது செய்தனர்.

Advertisment

சேலம் லைன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த மார்ச் 19ஆம் தேதி, தாதகாப்பட்டியில் உள்ள ஒரு நகைக்கடை அருகே நடந்து சென்றபோது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 பவுன் நகை, 850 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

Advertisment

இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறி செய்த மர்ம நபர், சேலம் லைன்மேடு வேலு புதுத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் சம்பு என்கிற சண்முகம் (32) என்பவர்தான் எனத்தெரிய வந்து, அவரை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே, பல்வேறு வழிப்பறி வழக்குகள் விசாரணையில் உள்ளதோடு, அவ்வழக்குகளில் கைதும் செய்யப்பட்டு உள்ளார். பிணையில் வெளியே சென்ற பிறகு மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதேபோல், அழகாபுரம் பெரிய புதூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார் (28) என்பவரும் பலமுறை வழிப்பறி குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

http://onelink.to/nknapp

அதன்படி, சம்பு என்கிற சண்முகம், அஜித்குமார் ஆகிய இருவரும் மே 30ஆம் தேதியன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதாகி சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்ட கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.

இவர்களில், சம்பு என்கிற சண்முகம் இரண்டாவது முறையாகவும், அஜித்குமார் மூன்றாவது முறையாகவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.