/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem-kundas.jpg)
சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் மூன்று பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த டிச.28ம் தேதி, சொந்த வேலையாக லீ பஜார் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து, கத்தி முனையில் மதிவாணனிடம் இருந்த 5500 ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்த பக்ருதீன் (வயது 47) என்பதும், அம்மாபேட்டை சுப்ரமணிய பாரதியார் தெருவைச் சேர்ந்த சதாம் ஹூசேன் (வயது 32) என்பதும் தெரிய வந்தது.
சம்பவம் நடந்த அன்றே இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் சங்கிலி, 4500 ரூபாய், ஒரு பவுன் மோதிரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சூரமங்கலம், இரும்பாலை ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதேபோல், அழகாபுரம் பெரிய புதூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் படையப்பா நகர் சாலையில் கடந்த டிச.28ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது, மிஸ்டர் பிளாக் என்கிற கிருஷ்ணகுமார் அவரை வழிமறித்துள்ளர். கத்தியைக் காட்டி மிரட்டி மகேந்திரன் வைத்திருந்த 2500 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க முயன்ற பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அழகாபுரம் காவல் நிலைய காவல்துறையினர், கிருஷ்ணகுமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி, 1700 ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே அழகாபுரம் காவல் நிலையத்தில் 2021, 2022ம் ஆண்டுகளில் வாகனத் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த பக்ருதீன், சதாம் ஹூசேன், கிருஷ்ணகுமார் ஆகிய ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோதாவிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆணையர் உத்தரவிட்டதன் பேரில், மூன்று பேரையும் ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)