ADVERTISEMENT

'வரதட்சணை வழக்கில் முன்னாள் துணைவேந்தரின் சிறைத் தண்டனை ஓராண்டாக குறைப்பு'- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

08:16 AM Jun 10, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT


மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஓராண்டாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT


சேலம், பெரியார் பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலுவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனஹள்ளியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் 2002இல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில தினங்களில் ராஜவேலு அமெரிக்கா சென்று விட்ட நிலையில், சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுத் தன்னை துன்புறுத்தியதாகவும், சூரமங்கலம் காவல் நிலையத்தில் சங்கீதா புகார் செய்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகன் ராஜவேல், மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சேதுபதி ராமலிங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதேசமயம், அவரது மனைவி ஜோதி, மகள் மற்றும் மருமகனை விடுவித்து தீர்ப்பளித்தது.


சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சேலம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சேதுபதி ராமலிங்கமும், அவரை வரதட்சணை சட்டப்பிரிவில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், கீழமை நீதிமன்றங்கள் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, சேதுபதி ராமலிங்கத்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், சேதுபதி ராமலிங்கத்திற்கு தற்போது 80 வயதாவதால், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு தண்டனையை, ஓராண்டாகக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், வரதட்சணை குற்றச்சாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நிர்மல் குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT