Skip to main content

1200 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரியை சேர்ந்த கோ.பெ.நாராயணசாமி ஆசிரியர், வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.இராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவுன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். 

 

m

 

அப்போது அங்குள்ள வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

 

  இது குறித்து ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் கூறும் போது..  இக்கல்வெட்டின் உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை. 

 

m


8 வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டு உள்ளது. இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக கருதலாம். எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன.
  

  வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காக கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை. 

 

m


கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம். வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது.


 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
  

பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமணதீர்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கனவே தமிழக தொல்லியல்துறை இதை பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்பு , பராமரிப்பு இன்றி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தை சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

சார்ந்த செய்திகள்