மேட்டூர் அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற வழக்கில், ஏழு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மேட்டூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொதியம்பட்டி காட்டுவளவைச் சேர்ந்தவர் பெருமாள் (34). கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி முத்தாள் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (37) என்பவருக்கும் திருமண உறவுக்கு வெளியே 'நெருக்கமான தொடர்பு' இருந்து வந்தது. இதையறிந்த பெருமாள், இந்த தொடர்பை உடனடியாக கைவிடுமாறு இருவரையும் எச்சரித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு செப். 18ம் தேதி இரவு, பொதியம்பட்டி அருகே உள்ள கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள், அவருடைய அண்ணன் மகன் மோகன், உறவினர்கள் கணேசன், மாதையன் ஆகிய நான்கு பேரும், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.

முத்தாளுடனான தொடர்பை விட்டு விலகுமாறு அடிக்கடி மிரட்டி வந்ததால் பெருமாளை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று மூர்த்தி முன்பே தீர்மானித்து இருந்த மூர்த்தி, அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில்தான், கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவர், தனது கூட்டாளிகள் கணேசன் (23), செம்பட்டையன் என்கிற தம்மண்ணன் (23), பெருமாள் (34), நாகராஜ் (26), அருண்குமார் (26), பொம்மநாயக்கர் (46) ஆகிய ஏழு பேருடன் சேர்ந்து வழிமறித்தார்.
பெருமாளுடன் வந்த கணேசன், மாதையன் ஆகியோரை மூர்த்தியின் கூட்டாளிகள் சிலர் பிடித்துக் கொண்டனர். மேலும், பெருமாள், மோகன் ஆகியோரை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள், நிகழ்விடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த மோகனை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து, மேச்சேரி காவல்நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தி உள்ளிட்ட கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, மேட்டூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், திங்கள்கிழமை (நவ. 11, 2019) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான மூர்த்தி உள்ளிட்ட ஏழு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், மூர்த்தி, கணேசன், செம்பட்டையன், பெருமாள் ஆகிய நால்வருக்கும் தலா 7500 ரூபாய் அபராதமும், நாகராஜன், அருண்குமார், பொம்மநாயக்கர் ஆகியோருக்கு தலா 6500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.