சேலத்தில், மாநகரை விட்டு ஊருக்கு வெளியே இறைச்சிக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் போட்டிப்போட்டு வரிசையில் நின்று தங்களுக்குப் பிடித்த ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.

Advertisment

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகச் செல்லும்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூன்று அடி இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) இறைச்சிக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.சமூக விலகல் விதிகள் காற்றில் பறந்தன.சேலத்தில் சமூக விலகலைக் கடைபிடிக்காத 20- க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.

salem district meat market peoples coronavirus prevention

Advertisment

இந்நிலையில், இந்த வார சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் இறைச்சிக் கடைகளில் அதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சேலம் மாநகரப் பகுதிகளில் காலங்காலமாக இயங்கி வந்த இறைச்சிக்கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

அதேநேரம், கருப்பூர் ஐ.டி. பார்க் அருகே, ஆடு, கோழி, மீன் இறைச்சிகளுக்கென பிரத்யேக சந்தையை சேலம் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியது.ஐ.டி.பார்க் வளாகத்தில் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் புதிய இறைச்சிக்கடைகள் சேலம் மாநகரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருந்தாலும்கூட, தொலைவைபொருட்படுத்தாமல் சேலம் மக்கள் இறைச்சிக்கடைகளில் நேற்று (ஏப். 5) காலை முதலே குவியத் தொடங்கினர்.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களை சானிடைசர் போட்டு கைகளை நன்றாக கழுவிவிட்டு வருமாறும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகளும், காவல்துறையினரும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.இந்த விதிகளை பின்பற்றினால் மட்டுமே இறைச்சிக்கடைகளுக்குச் செல்ல முடியும் என்றும் கறாராக உத்தரவிட்டனர்.

புதிய இறைச்சி சந்தையில் நாற்பது கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுகாதாரத்துறையினர் உடல் பரிசோதனை போன்ற விதிகளைக் கட்டாயமாக்கி இருந்தாலும் சிரமங்களைக் கருதாமல் மக்கள் வரிசையில் மூன்றடி இடைவெளி சமூக விலகலைக் கடைப்பிடித்து நின்று,தங்களுக்குத் தேவையான இறைச்சியை வாங்கிச்சென்றனர்.

அதேநேரம், மாநகரப் பகுதிகளில் வீடுகள் அருகே இருக்கும் இறைச்சிக்கடைகளில் பத்து, பதினைந்து நிமிடங்களில் இறைச்சியை வாங்கி வந்த நிலையில்,தற்போது பல கி.மீ. தூரம் கடந்து செல்வதோடு,கடைகளில் வரிசையில் நின்று வாங்குவதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.