சேலம் அருகே, நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைக்கடையின் பூட்டை உடைத்து பதினைந்து கிலோ வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் ரவி (58). ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நகை வணிகத்திலும் இறங்க முடிவு செய்திருந்த அவர், தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியைத் தடுத்து, நகைக்கடையாக மாற்றினார். சாந்தி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில், ஜனவரி 1, 2020ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார். நகைக்கடையை ரவியின் மகன் சந்தோஷ் (29) என்பவர் தனியாக நிர்வாகம் செய்து வருகிறார்.

Advertisment

salem district jewellery shop theft police investigation

இந்நிலையில், புதன்கிழமை (ஜன. 22) இரவு வழக்கம்போல் நகை வியாபாரத்தை முடித்துவிட்டு, அதற்குரிய கணக்கு வழக்குகளை சரிபார்த்து விட்டு, கடையின் ஷட்டரை பூட்டிவிட்டு சந்தோஷ் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் அதிகாலையில் அந்த கடையின் வழியாக நடைப்பயிற்சிக்குச் சென்ற சிலர், கடையின் முன்பக்க கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளனர். கடையின் உரிமையாளர்தான் வந்திருப்பாரோ என நினைத்து கடை அருகே சென்று ரவி, சந்தோஷ் ஆகியோரை பெயர் சொல்லி அழைத்திருக்கின்றனர். ஆனால் கடைக்குள்ளிருந்து பதில் வராததால், சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் ரவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.

அதன்பேரில் ரவியும் அவருடைய மகனும், உடனடியாக கடைக்கு வந்து பார்த்தனர். கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மறுநாள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பதினைந்து வெள்ளி கொலுசு, மெட்டி, கழுத்தில் அணியும் சங்கிலி, அரைஞாண் கொடி, வெள்ளி காப்பு, காமாட்சி விளக்கு, சிறு குத்துவிளக்கு உள்ளிட்ட 15 கிலோ வெள்ளி நகைகள், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் உள்ள தங்க நகைகளை மட்டும் அன்றாடம் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது கையோடு எடுத்துச் சென்று விடுவதால், தங்க நகைகள் கொள்ளை போவதில் இருந்து தப்பின.

Advertisment

salem district jewellery shop theft police investigation

இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். ஓமலூர் உள்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். சம்பவ இடம் அருகே மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நள்ளிரவு 12.00 மணியளவில், சம்பவம் நடந்த சாலையில் ஜலகண்டாபுரம் சிறப்பு எஸ்ஐ பழனிசாமி என்பவர் ரோந்து பணிக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் சென்ற சில நிமிடங்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள், நகைக்கடையின் ஷட்டர் கதவை இரும்பு கம்பியால் நெம்பி உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கடைக்குள் புகுந்த 20 நிமிடங்களில் வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளை அடித்துவிட்டு அந்த கும்பல் வெளியேறியுள்ளனர்.

விரல் ரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த கடையில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் மேகா, சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.